திருவேடகம் ஏடகநாதர் ஆலயத்தில் ஏடு எதிரேறிய விழா

திருவேடகம் ஏடகநாதர் ஆலயத்தில் ஏடு எதிரேறிய விழா
X

திருவேடகத்தில் நடைபெற்ற ஏடு எதிரேறிய திருவிழா

வரலாற்று சிறப்புமிக்க திருவேடகம் ஏடகநாதர் கோவில் ஏடு எதிர் ஏறிய நிகழ்வு பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது

திருவேடகம் ஏலவார் குழலி அம்மன் சமேத, ஏடகநாதர்சுவாமி கோவில் மிகவும் வரலாற்று சிறப்புமிக்க கோவில்களில், ஒன்றாகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி பவுர்ணமி அன்று ஏடு எதிரேறிய திருவிழா நடைபெறும்.

ஏழாம் நூற்றாண்டில் மதுரையை ஆட்சி செய்த மன்னன் கூன் பாண்டியன் சமண மதத்தை சார்ந்திருந்தான். அவனுக்கு தீராத வெப்பு நோய் ஏற்பட்டது. அவன் மனைவி மங்கையர்க்கரசி ஒரு சிறந்த சிவ பக்தை. சைவத்தைக் காப்பாற்ற மங்கையர்க்கரசி அழைப்பின் பேரில் திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்தபோது, திருநீறு பூசி அரசன் கூன்பாண்டியனின் வெப்ப நோய் நீங்க உதவினார். அங்கிருந்த சமணர்கள் ஆத்திரமுற்று சம்பந்தருடன் அனல் வாதம் புனல் வாதம் புரிந்தனர். சமணர்களை 'அனல்வாதத்தில்' வென்ற திருஞான சம்பந்தர், பின் 'புனல்வாதத்தில்' ஈடுபட்டார். இப்போட்டியில் சமணர்கள் ஒரு சுலோகத்தை எழுதி அதை வைகை ஆற்றில் இட, சமணரின் ஏடு ஆற்றோடு போய்விட்டது. ஆனால் திருஞான சம்பந்தர் இட்ட வாழ்க அந்தணர் என்ற பதிகம் எழுதிய ஏடு ஆற்றினை எதிர்த்துச்சென்று இன்றைய ஏடகப்பகுதியின் (திருவேடகம்) கரையை அடைந்தது இதனைக் கண்ட சமணர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டனர். அந்த இடத்தில் சிவன் ஆலயம் இருந்ததால், "திருஏடு நின்ற இடம்' என அழைக்கப் பட்டது. காலப்போக்கில் இது திருவேடகம் என மாறியது.

இந்நிகழ்ச்சியை குறிக்கும் வகையில், பல ஆண்டுகளாக நடக்கும் இந்த "ஏடு எதிரேறிய' திருவிழா அரசு கட்டுப்பாடு உத்தரவின் பேரில், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் கோவில் மூடப்படும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தனர். இதனால் ,இந்த தலத்தில் நடத்தக்கூடிய முக்கிய திருவிழாவான திரு ஏடு எதிரேறிய திருவிழா பக்தர்கள் இல்லாமல் மிக எளிமையாக நடைபெற்றது. கோவில் அருகே உள்ள வைகைஆற்று கரையில், திருஞானசம்பந்தர் சன்னதியிலிருந்து வாழ்க அந்தணர் என்ற வாசகம் பொறித்த செப்புத் தகட்டில் உள்ள ஏடு கேடயத்தில் அலங்காரமாகி வைகையாற்றில் படித்துறைக்கு வந்து சேர்ந்தது.

இங்கு ஓதுவார்கள் தலத்திலேயே வரலாறும்,ஏடு எதிரேறிய வரலாறும் பக்தி பாடலுடன், எடுத்துரைத்தனர். பின்னர், வைகை ஆற்று வெள்ளத்தில் ஏடு எதிர்கொள்வது போல் காட்சி நடைபெற்றது. பின்னர், பூஜைகள் நடந்து பிரசாதம் வழங்கினார்கள்.

கோவில் செயல் அலுவலர் இளஞ்செழியன், பரம்பரைஅறங்காவலர் சேவுகன் செட்டியார், கோவில் பணியாளர்கள் மற்றும் பிரதோஷம் கமிட்டியினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!