சோழவந்தான் புதிய பஸ் நிலையம் திறப்பு விழா காண்பது எப்போது
மதுரை அருகே சோழவந்தானில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாக திறக்கப்படாமல் உள்ள பஸ் நிலையம்
சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் சோழவந்தான் பேருந்து நிலைய வணிக வளாகம்விரைவில் திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தானில், சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களுக்காக பழைய பேருந்து நிலையத்தை இடித்து விட்டு புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. அப்போது பேருந்து நிலையத்தில் இருந்த வணிக வளாகங்களும் இடிக்கப்பட்டு, புதிய பேருந்து நிலையம் கட்டும்போது அதனுடன் சேர்த்து 30க்கும் மேற்பட்ட கடைகளை இரண்டு அடுக்குகளாக கட்டப்பட்டது.
ஆனால், பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாததால், அதனுடன் சேர்த்து கட்டப்பட்ட வணிக வளாகங்களும் திறக்கப்படாமல் உள்ளது.
இந்த நிலையில், சோழவந்தான் பேரூராட்சி சார்பில், வணிக வளாகங்கள் ஏலம் விடும் பணிகள் நடைபெற்றது.இதில், கீழே உள்ள கடைகள் ஏலம் எடுக்கப்பட்ட நிலையில் ,முதல் மாடி உள்ள கடைகளை ஏலம் எடுக்க யாரும் முன் வராததால், ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், குறித்த காலத்தில் பணிகள் முடிக்கப்பட்டும் பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகங்களும் பயன்பாட்டிற்கு வராத நிலையில், பகல் மற்றும் இரவு நேரங்களில் வணிக வளாகங்கள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக, காலையிலேயே மது பிரியர்கள் வணிக வளாகங்களில் முதல் மற்றும் இரண்டாவது மாடி பகுதியில் சென்று கூட்டமாக அமர்ந்து மது அருந்துவதும், சீட்டு ஆடுவதும், கஞ்சா போன்ற அதிகம் போதை தரும் பொருட்களை பயன்படுத்தி சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.
மேலும், பேருந்து நிலையம் அருகிலேயே ரயில் நிலையம் உள்ளதால், வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளும் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளும் சோழவந்தான் பேருந்து நிலையத்தை கடந்து செல்ல வேண்டிய நிலையில் மது பிரியர்களின் தொல்லை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, பெண்களிடம் அத்துமீரும் செயல்களில் ஈடுபடுவதும், பொது மக்களிடம் மிரட்டி பணத்தைப்பிடுங்கிச்செல்வதும் தொடர் கதையாக நடந்து வருகிறது. மேலும், வணிக வளாக கட்டடங்களில் இரவு நேரங்களில் விபச்சார செயல்களும் நடைபெறுவதாகவும் இந்த பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஆகையால், சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து, வணிக வளாகங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகம் பேருந்து நிலையத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சோழவந்தான் காவல்துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு சமூக விரோத செயல்களை தடுக்க வேண்டும் எனவும் பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu