அலங்காநல்லூர் அருகே காளைக்கு மணி மண்டபம் கட்டி வழிபடும் கிராமத்தினர்
அலங்காநல்லூர் அருகே பொந்துகம்பட்டி கிராமத்தில் உள்ள ஜல்லிக்கட்டு காளை மணி மண்டபம்.
உலகப் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் பாலமேடு ஜல்லிக்கட்டில் உள்ளூர் காளைகளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் ஜல்லிக்கட்டு காளைக்கு மணிமண்டபம் கட்டி வழிபடும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பொந்துகம்பட்டி கிராமத்தில், தங்கள் வீட்டுப் பிள்ளையாக ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வந்தனர். இந்த ஜல்லிக்கட்டு காளை தமிழகத்தின் ஜல்லிக்கட்டு நடைபெறும் அனைத்து ஊர்களுக்கும் சென்று பல பரிசுகளை பெற்று வந்துள்ளது.
இந்த பரிசு பொருட்கள் அனைத்தும் கிராமத்தின் மந்தை பகுதியில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. கிராம பொதுமக்கள் வளர்க்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளை கடந்த 2006 ஆம் ஆண்டு நோய் வாய்ப்பட்டு இறந்தது. ஜல்லிக்கட்டு காளைக்கு கிராம மக்கள் ஒன்று சேர்ந்து மணிமண்டபம் கட்டி வழிபட்டு வருகின்றனர். மேலும், வருடம்தோறும் மே 1ஆம் தேதி ஜல்லிக்கட்டு காளை இறந்த நாளன்று கிராமமக்கள் ஒன்று சேர்ந்து சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரையும் வரவழைத்து அன்னதானம் வழங்கி ஜல்லிக்கட்டு காளை இறந்த தினத்தை துக்க தினமாக அனுசரித்து வருகின்றனர்.
தற்போது அதன் நினைவாக புதிய ஜல்லிக்கட்டு காளை ஒன்றை கிராமத்தினர் வளர்த்து வருகின்றனர். புதிய காளையை வருடந்தோறும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவிற்கு கிராமத்தின் சார்பாக அவிழ்த்து விடுகின்றனர். ஆனால், கடந்த சில வருடங்களாக அலங்காநல்லூர் பாலமேடு ஜல்லிக்கட்டில் வெளி மாவட்டத்தில் இருந்து வரும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதால், உள்ளூர் காளைகலை ஜல்லிக்கட்டு போட்டியில் அவிழ்க்க முடியாமல் சிரமப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, பொந்துகம்பட்டி கோவில் பூசாரி கூறும்போது:- கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக எங்கள் ஊரில் கிராம காளையாக ஜல்லிக்கட்டு காளையை அனைவரும் வளர்த்து வந்தோம். கடந்த 2006 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு காளை இறந்த நிலையில் அதன் நினைவாக மற்றொரு காளையை கிராமத்தின் சார்பாக வளர்த்து வருகிறோம். ஆனால், அலங்காநல்லூர் பாலமேடு ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் உள்ளூர் காளைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், வெளி மாவட்டத்தில் இருந்து வரும் காளைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், எங்கள் காளையை ஜல்லிக்கட்டில் இறக்க முடியாமல் சிரமப்படுகிறோம். ஆகையால், ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் உள்ளூர் காளைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu