சோழவந்தான் அருகே மோசமான சாலையால் அவதிப்படும் கிராம மக்கள்

சோழவந்தான் அருகே மோசமான சாலையால் அவதிப்படும்  கிராம மக்கள்
X

 சோழவந்தானிலிருந்து பிரசித்தி பெற்ற குருவித்துறை குரு பகவான் கோவிலுக்கு செல்லும் பிரதான சாலை மோசமான நிலையில் இருப்பதை சீரமைக்கக்கோரிக்கை

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக முறையாக செப்பனிடப்படாத சாலையால் பொதுமக்கள் அவதி

சோழவந்தான் அருகே சாலை மோசமாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் முதல் குருவித்துறை வரை மோசமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருவதைத் தடுத்திட சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தானிலிருந்து பிரசித்தி பெற்ற குருவித்துறை குரு பகவான் கோவிலுக்கு செல்லும் பிரதான சாலை மோசமான நிலையில் இருப்பதால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், ரோடுகளில் ஆங்காங்கே விபத்தை ஏற்படுத்தக்கூடிய பள்ளம் அதிகம் காணப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக முறையாக செப்பனிடப்படாத சாலையால் ,இரவு நேரங்களில் வருவோர் மிகுந்த சிரமத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

குறிப்பாக, மன்னாடிமங்கலம் வளைவில் முழங்கால் அளவு பள்ளத்தில் சாக்கடை நீருடன் மழை நீரும் தேங்கி இருப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். பிரசித்தி பெற்ற குருவித்துறை குருபகவான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், மன்னாடிமங்கலம் ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், புனித அந்தோனியார் ஆலயத்துக்கு வரும் பக்தர்களும் மிகுந்த சிரமத்துடனே வந்து செல்கின்றனர்.

இது குறித்து மன்னாடிமங்கலம், குருவித்துறை கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம் இந்த சாலையை செப்பனிட நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இந்நிலை தொடர்ந்தால் விரைவில் பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த போவதாகவும் கூறுகின்றனர்.

எனவே ,மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சாலையை சீரமைக்க வேண்டும் என்றும் விபத்து ஏற்படும் முன் சாலையை சரி செய்ய வேண்டும் என்றும் இப்பகுதி சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இச்சாலையானது திமுக எம்எல்ஏ வெங்கடேசன் வெற்றி பெற்ற சோழவந்தான் தொகுதியில் உள்ளதால் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!