மதுரை அருகே இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு வீர அஞ்சலி செலுத்திய கிராம மக்கள்
மதுரை அருகே சோளங்குருணி கிராமத்தில் இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு கிராம மக்கள் கரகாட்டத்துடன் ஊர்வமாக சென்று அஞ்சலி செலுத்தினர்.
அவனியாபுரம் அலங்காநல்லூர் பாலமேடு போன்ற பகுதிகளில் அடங்காமல் திமிறிய காளை வயது மூப்பின் காரணமாக சோழங்குருணி கிராமத்தில் மரணத்தை தழுவியதால் அதற்கு கிராம மக்கள் வீர அஞ்சலி செலுத்தினர்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே, சோழங்குருணி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன்கள் ராஜாங்கம் ,கிரி ஆகிய இருவரும் பிரபல மாடுபிடி வீரர்கள் இவர்கள் தங்களுக்கு சொந்தமான காங்கேயம் காளையை வளர்த்து வந்தனர்.
இந்த காளையானது அவனியாபுரம் , அலங்காநல்லூர், பாலமேடு ,சிராவயல் புதுக்கோட்டை, தஞ்சாவூர், விராலிமலை உள்பட பல்வேறு ஊர்களில் 80க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றது.
தற்போது வயது மூப்பின் காரணமாக இறந்து விட்டது. இதனைத் தொடர்ந்து, காளை இறந்ததை கேள்விப்பட்ட சோழங்குருணி மற்றும் சுற்றியுள்ள வளையங்குளம், காஞ்சாங்குளம், நல்லூர் போன்ற பகுதிகளை சேர்ந்த மக்கள் காளைக்கு அஞ்சலி செலுத்தினர் .
மேலும், கிராம பாரம்பரிய முறைப்படி கரகாட்டம் நாதஸ்வரம் முழங்க டிராக்டரில் எடுத்துச் செல்லப்பட்டு முருகனுக்கு, சொந்தமான நிலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறந்த காளை தங்களது குடும்ப உறுப்பினர் போல் இருந்தது ஆகையால், அதை அஞ்சலி செலுத்தி கெளரவப்படுத்துகிறோம் என, பொதுமக்கள் கூறினர்.
பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கு பெற்று அடங்காத காளை ராஜாங்கம், கிரி ஆகியோரிடம் குழந்தை போல் விளையாடும். அலங்காநல்லூர் மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுபிடி வீரர்களை பந்தாடிய வீடியோ மற்றும் போட்டோ காட்சிகளை பார்த்து மக்கள் தங்கள் ஊர் காளையை பெருமையுடன் பேசுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu