பண மோசடி செய்த மின்வாரிய ஊழியர், அலுவலகத்தை முற்றுகையிட்ட பாதிக்கப்பட்டோர்
மதுரை அருகே, பண மோசடி செய்ததாக மின்வாரிய அலுவலர் மீது புகார் அளித்த பாதிக்கப்பட்டவர்கள்
மதுரை மாவட்டம், பாலமேடு மின்வாரிய அலுவலகத்தில் மின் கணக்கீட்டாளராக பணிபுரிந்து வருபவர் மணிகண்டன். இவர், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டுவதற்காக மதுரை சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மகாராஜன் மனைவி சுதா மற்றும் அவரை சேர்ந்த சுமார் பத்துக்கும் மேற்பட்டவர்களிடம் 45 லட்சம் அளவில் பணத்தைப் பெற்றுக் கொண்டு மூன்று ஆண்டுகளாக திருப்பி தராமல் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், பணத்தை இழந்த சுதா மற்றும் அவரை சேர்ந்தவர்கள் பணத்தை கேட்டு பாலமேடு மின் வாரிய அலுவலகத்திற்கு சென்ற நிலையில் அவர் நீண்ட விடுப்பில் சென்றுள்ளதாக அங்கிருந்தவர்கள் கூறியுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து, கடந்த 5 12.2022 ஆம்தேதி பாலமேடு காவல் நிலையத்தில் மணிகண்டன் மீது சுதா பண மோசடி புகார் கொடுத்துள்ளார்.
புகாரின்பேரில் , பாலமேடு காவல்நிலையத்தில் மணிகணடன் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை அறிந்த மணிகண்டன், வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜராகி பண மோசடி வழக்கிலிருந்து ஜாமீன் பெற்றுள்ளார். மேலும், ஜாமீன் பெற்ற மணிகண்டன் வழக்கு சம்பந்தமாக அலுவலகத்திற்கு தெரிவிக்காமல், எப்போதும் போல் பாலமேடு மின் வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், பணத்தைக் கேட்டு மீண்டும் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்ற சுதாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. மதுரை புதூரில் உள்ள மாவட்ட மின்வாரிய தலைமை அலுவலகத்திற்கு சென்ற சுதா, மணிகண்டன் மீது மீண்டும் புகார் கொடுத்துள்ளார். அதில், தன்னிடம் பாலமேடு மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் மணிகண்டன் 12 லட்சம் அளவில் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றி வருவதாகவும், மேலும் அதனை மறைத்து நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று பணிபுரிந்து வருவதாகவும் அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சமயநல்லூர் செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு சுதாவை வர சொன்ன செயற்பொறியாளர், இது குறித்து மணிகண்டனுக்கும் தகவல் அனுப்பி வரச் சொல்லியதாக கூறியுள்ளார். இந்த நிலையில், நேரடி விசாரணைக்கு சமயநல்லூர் அருகே உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு சுதா மற்றும் பணத்தை இழந்த பத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்த நிலையில், மணிகண்டன் ஆஜராக வராதது தெரிந்து பாதிக்கப்பட்ட பெண்கள் செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.
இதனை அறிந்த அங்கிருந்த அதிகாரிகள் மாலை 3 மணிக்கு கண்டிப்பாக மணிகண்டனை வரவழைப்பதாக கூறியிருந்த நிலையில் 3 மணி வரை காத்திருந்த சுதா மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மணிகண்டனை அதிகாரிகளே மறைத்து வைத்து நாடகம் ஆடுவதாகவும், மேலும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும் என்றும் இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நேரில் முறையிட போவதாகவும் தெரிவித்தனர்.
சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான பணத்தைப் பெற்றுக் கொண்டு மின்வாரிய அதிகாரி பணம் கொடுத்தவர்களை ஏமாற்றி சுமார் இரண்டு மாதத்திற்கு மேலாக தலைமறைவாக உள்ள நிலையில் இதற்கு பின்பு அதிகாரிகளின் ஒத்துழைப்பு இருக்குமோ என்று பாதிக்கப்பட்டவர்கள் சந்தேகத்துடன் உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu