குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் ஆலயத்தில் திருக்கல்யாணம்
சோழவந்தான் அருகே, குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலில் தவக்கோலத்தில் குருபகவான் எழுந்தருளி ஒவ்வொரு குரு பெயர்ச்சிக்கும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவதால் இங்கு குரு பெயர்ச்சி விழா மிகச் சிறப்பாக நடைபெறும்.
இதே போல், சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் பல ஆண்டுகளுக்கு முன்பாக திருக்கல்யாணம் நடைபெற்றது. மீண்டும் திருக்கல்யாணம் நடைபெறுவதற்கு, இக்கோயிலின் பக்தர்களுடைய வேண்டுகோளை ஏற்று ,சித்திர ரத வல்லப பெருமாள் திருக்கல்யாணம் திருவிழா நடத்துவது தீர்மானிக்கப்பட்டு, கோவில் செயல் அலுவலர் கார்த்திகை செல்வி, இங்குள்ள பட்டர்கள், பணியாளர்கள் மற்றும் கிராம முக்கியஸ்தர்களுடன், ஆலோசனை நடத்தினர்.
இதன் பேரில், நேற்று காலை சித்திர ரத வல்லப பெருமாள் கோவில் திருக்கல்யாண திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு, ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் சித்திர ரத வல்லப பெருமாள் கேடயத்தில் எழுந்தருளி பெண்கள் கல்யாண சீர்வரிசை எடுத்து வந்து கோவிலில்வலம் வந்து மாப்பிள்ளையும், மணபெண்ணும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து ஸ்ரீதேவி,பூதேவி சித்திர ரதவல்லப பெருமாள் திருமண கோலத்தில் மண மேடைக்கு வந்து சேர்ந்தனர். இங்கு சடகோபன் பட்டர், ஸ்ரீ பாலாஜி பட்டர் உள்பட 12 பட்டர்கள் கல்யாண யாக வேள்விபூஜை நடத்தினர். சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், கோவில் செயல் அலுவலர் கார்த்திகை, செல்வி, ஒன்றியச் கவுன்சிலர்கள் பசும் பொன்மாறன், ரேகா வீரபாண்டி, சோழவந்தான் பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், பிற்பட்டோர் நலத்துறை உறுப்பினர் பேட்டை பெரியசாமி, திருவேடகம் சி .பி .ஆர். சரவணன் ஆகியோர் முன்னிலையில், ஸ்ரீதேவி , பூதேவி சமேத சித்திர ரத வல்லவர் பெருமாள் திருக் கல்யாணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, கல்யாண நலங்கு நடந்தது .
திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு, மதுரை,திண்டுக்கல், விருதுநகர் உட்பட சோழவந்தான் சுற்றியுள்ள கிராம மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் நடைபெற வேண்டி பிள்ளைகள் ஜாதகத்தை வைத்து திருமணம் ஆகாதவர்கள் மாலை அணிந்து தங்களது திருமண பிரார்த்தனை செய்து வேண்டுதலை நிறைவேற்றினர். இவர்களுக்கு சிறப்பு அர்ச்சனை பூஜைகள் நடத்தி பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. திருவேடகம் கோவில் செயல் அலுவலர் சரவணன், கோவில் பணியாளர்கள் நாகராஜன், மணி, பழனிகுமார், திவ்யா, ஜனார்த்தனன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திருக்கல்யாணம் நடைபெற்றதால் , திருமணம் ஆகாதவர்கள் திருமணம் நடைபெற வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டால், திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். ஆகையால், பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்திருந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றி சென்றனர் .
காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், ஏட்டுகள் மாரியப்பன் ,பாபு காந்தி, பூமா உள்பட போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu