சோழவந்தானில் கோயில் விழா: சுகாதாரப் பணிகளை ஆய்வு செய்த தலைவர்
சோழவந்தானில் பேரூராட்சி தலைவர் எஸ். எஸ். கே. ஜெயராமன் முன்னிலையில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது .
மதுரை அருகே,சோழவந்தானில், தேரோட்டம் நடைபெறும் பகுதியில், சுகாதாரப் பணிகள் பேரூராட்சித் தலைவர் மேற்பார்வையில் நடைபெற்றது.
மதுரை மாவட்டம், சோழவந்தானில் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா நடைபெற்று வரும் நிலையில், வருகின்ற 30ந் தேதி அக்னி சட்டி பால்குடமும் 31ஆம் தேதி பூக்குழி திருவிழாவும் 6ந் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர் வரும் பாதையான தெற்கு ரத வீதி மேலரத வீதி வடக்கு ரத வீதி ஆகிய பகுதிகளில் பேரூராட்சி தலைவர் எஸ். எஸ். கே. ஜெயராமன் முன்னிலையில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது .
துணைத் தலைவர் மற்றும் செயல் அலுவலர் சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் ஆகியோர் மேற்பார்வையில், பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலின் சிறப்புகள்.,,
இங்கு அம்மன் 2 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.1000-2000 வருடங்களுக்கு முன் பழமை வாய்ந்த ஆலயம்.பசுமை மிகுந்த சோழவந்தான் நகரை சுற்றியுள்ள 48 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மிக சிறப்பாக தங்கள் குல தெய்வமாக போற்றி வணங்கும் சக்தி வாய்ந்த மாரி வீற்றிருக்கும் சிறப்பு மிகுந்த தலம்.
எண்ணற்ற வியாதிகளை குணப்படுத்தும் மருத்துவகோயில் இது.வைகை என்னும் புண்ணிய நதியின் கீழ்கரையில் சதுர்வேதிபுரம், அனந்தசாகரம், ஜனகையம்பதி என்றெல்லாம் போற்றப்படும் கோயில்.அனைத்து ஜீவ ராசிகளையும் பரிபாலனம் செய்ய உலகில் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐங்கீர்த்தியங்களையும் செய்து பிறவிப்பெரும் பயனை அடைய வைக்கும் ஆலயம்.
அம்மை நோய் கண்டவர்கள் இத்தலத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு ஈரத் துணியோடு வந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்து மனமுருகி வேண்டிக் கொண்டு அர்ச்சகர் தரும் அம்பாள் தீர்த்தம் வாங்கி குடிக்க வேண்டும். இது மஞ்சள் வேப்பிலை மற்றும் வேறு சில பொருட்களும் கலந்த மருத்துவ குணமும் அம்பாள் கருணையும் கலந்த அபூர்வ தீர்த்தம் ஆகும்.
மதுரை அருகிலுள்ள புண்ணியத்தலம், சோழவந்தான்.பூஜை மற்றும் மங்கள நிகழ்ச்சிகளில் வெற்றிலை இல்லாமல் இருக்காது.ராமனின் வெற்றிச் செய்தியை அறிவித்தவுடன், சீதாபிராட்டி, அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவித்து, பாராட்டினாள் என்ற செவி வழி செய்தியுண்டு.அத்தகைய சிறப்புமிக்க வெற்றிலை, அதிகமாக விளையும் சோழவந்தானில் கோவில் கொண்டுள்ளாள், ஜெனகை மாரியம்மன்.
இந்த மாரியை, ஜனகமகாராஜா வணங்கியதாக தல வரலாறு கூறுகிறது. இதனால், இவள், ‘ஜனகை மாரி’ எனப்பட்டு, ‘ஜெனகை மாரி’ என்ற பெயர் மாற்றம் பெற்றாள்.அம்மனுக்கு பின்புறம் ஆக்ரோஷ நிலையில் காட்சி தருகிறாள், ரேணுகாதேவி. இவளை, ‘சந்தனமாரி’ என்கின்றனர்.இக்கோவிலில், வைகாசி திருவிழா, 17 நாட்கள் நடக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu