மதுரை அருகே பாறைப்பட்டியில் கன்னிமார் ஆலய சிறப்பு பூஜை
பாறைப்பட்டி கன்னிமார் கோயிலில் நடைபெற்ற பூஜை
மதுரை மாவட்டம், காஞ்சரம்பேட்டை அருகே பாறைபட்டியில் உள்ள பேசும் கன்னிமார் கோயிலில், பங்குனி மாத சர்வஅமாவாசை பூஜைகள், உலக நன்மை வேண்டியும், மக்கள் நலமுடன் வாழவும் கூட்டு பிரார்த்தனைகள் நடந்தது.
இதையொட்டி, 7 கன்னிமார் அம்மன்களுக்கும் சிறப்பு பூஜைகள், சம்மங்கி, ரோஜா, மல்லிகை, அரளி, முல்லை, மஞ்சள் செவ்வந்தி, நாணல் புல், உள்ளிட்ட வண்ண பூமாலைகள், பட்டாடைகள், அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தது. தீபாராதனைகளும் , நடந்தது. சுற்று வட்டாரங்கள், வெளி மாவட்டங்ளில் இருந்து ஏராளமான பக்தர்கள், குலதெய்வ வழிபாடு உள்ளவர்கள், வேண்டுதல்கள் நிறைவேறியவர்கள், குழந்தை வரம், திருமண வரம், நிறைவேறியவர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, அங்குள்ள மண்டப வளாகத்தில் அறுசுவை உணவு, அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக, சித்தி விநாயகர், மந்தை கருப்புசாமி கோவிலிலும் பூஜைகள் நடந்தது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பாறைபட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
கன்னிமார் கோயில் வரலாறு...
அன்னையர் எழுவருக்கு என தனிக்கோயில்கள் ஒரு சிலவே இருந்துள்ளன. கிராமத் தெய்வங்களாக இருந்த தாய் தெய்வங்கள், பின்னர் ஏற்றம்பெற்று கன்னிமார்கள் என்றும், தாய் தெய்வங்கள் எழுவர் என்றும், சப்தமாதர்கள் என்றும் அழைத்துப் போற்றப்பட்டுள்ளனர்.
பல்லவர் காலம் தொட்டே தனித்தனியாக இவர்களுக்குச் சிற்பங்கள் அமைத்து மக்கள் வழிபட்டுள்ளனர். நார்த்தாமலை போன்ற இடங்களில் அதன் தடயங்களைக் காணலாம். அன்னையர் எழுவர், தென்தமிழகத்தில் பெற்ற பரவலான வரவேற்பை வடதமிழகத்தில் பெற முடியவில்லை. பாண்டியர் பகுதியில் திருக்கோளக்குடி, குன்னத்தூர், கோகர்ணம், பரங்குன்றம், மலையடிப்பட்டி போன்ற இடங்களில் இத்தொகுப்பைக் காணலாம்.
தனிக்கோயில்கள் வழிபாடு என்பதைக் காட்டிலும், அளவில் பெரியதாக தாய் தெய்வங்களைப் படைத்து, அவற்றை கோயிலின் திருச்சுற்றுப் பிராகாரத்தில் அமைத்து அதற்குத் தனிச் சிறப்பை கொடுத்துள்ளனர். இருப்பினும், கர்ப்பக் கிருகத்திலோ அல்லது கோயிலுக்குள்ளேயே தனிக் கோயிலாகவோ அமைக்கப்படவில்லை. காரணம், கிராமங்களில் இருந்து வளர்ச்சி பெற்ற தெய்வங்கள் என்பதாலோ அல்லது பெரும்பான்மையாகச் சமூகத்தில் தாழ்நிலையில் உள்ள மக்கள் வணங்குவதாலோ என்பதாலா எனச் சரியாகக் கூறமுடியவில்லை. தெய்வச் சிற்பங்களிலும், போர்த் தெய்வங்களின் சிற்பங்கள் என்றால் அதற்குக் குறிப்பட்ட காலத்தில் மட்டுமே பூசைகளைச் செய்து வழிபடும் வழக்கத்தைக் கொண்டிருந்ததாலா என்பதும் அறிய இயலவில்லை.
தமிழகத்தில், குறிப்பாக தென்தமிழகத்தில் பரவலாக அன்னையர் எழுவர் தாய் தெய்வங்களின் சிற்பத் தொகுப்பினை அதிக அளிவில் காணமுடிகிறது. பாண்டியர் காலம் முதல் தொடர்ச்சியாகப் பல்லவர்கள், சோழர்கள், விஜயநகரப் பேரரசர்கள் காலம் வரை தாய் தெய்வங்களின் சிற்பத் தொகுப்பு பரவலாகக் காணப்பட்டாலும், அவற்றின் அமைப்பு முறையிலும், வழிபாட்டு முறையிலும் பெரும் மாறுபாடுகள் இருப்பதை அறியமுடிகிறது.
தென்தமிழகத்தில் நாட்டார் வழக்குகளுக்குள் வந்த இத்தாய் தெய்வம், காலப்போக்கில் சிற்பான முதன்மை இடத்தைப் பிடித்து மக்களின் செல்வாக்கைப் பெற்றது. எவ்வாறாயினும், கோயில்களில் அமைந்த பெரும் தெய்வங்களுக்கு இணையாக இத்தாய் தெய்வங்களுக்குத் தனிக் கோயில்களோ, அல்லது தனி இடமோ ஒதுக்கப்பட்டு பராமரிக்கப்பட வில்லை. கிராமத் தெய்வங்களைப்போல கோயிலின் சுற்றுப் பிராகாரத்தில் பரிவார தேவதைகளின் வரிசையில் இத்தொகுப்பையும் கொண்டுவந்து சேர்த்துள்ளனர் என்பதாகவே ஆய்வுகள் கூறுகின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu