கட்டாத கழிப்பறைக்கு பல லட்சம் பணம் பெற்று மோசடி -பரபரப்பு குற்றச்சாட்டு

கட்டாத கழிப்பறைக்கு பல லட்சம் பணம் பெற்று மோசடி -பரபரப்பு குற்றச்சாட்டு
X
கழிப்பறை கட்டாமல், கட்டியதாக கூறி பல லட்சம் மோசடிசெய்துள்ளனர் என ஊராட்சி மன்ற தலைவர், து.தலைவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு.

மதுரை, வாடிப்பட்டி அருகே காடுபட்டி ஊராட்சியில், கட்டாத கழிப்பறைக்கு பல லட்சம் பணம் பெற்று மோசடி செய்ததாக ,ஊராட்சி மன்ற த் தலைவர் மீது, துணைத் தலைவர் மற்றும் பொதுமக்கள். குற்றம்சாட்டுகின்றனர். தட்டிக் கேட்க சென்ற பொதுமக்களை அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டுகின்றார். இது சம்பந்தமாக, பொதுமக்கள் ஒன்று திரண்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காடுபட்டி ஊராட்சியில், காடுபட்டி வடகாடு பட்டி புதுப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்த்து சுமார் 3000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இந்த ஊராட்சியில், 9 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். ஊராட்சியில் கடந்த ஆறு மாத காலத்தில், தனிநபர் கழிவறை கட்டும் திட்டத்தில் பல லட்சம் மோசடி நடைபெற்றாத பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆகியோர் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் ,இந்த ஊழல்கள் அனைத்து அதிகாரிகள் ஒத்துழைப்புடன் நடைபெற்றதாகவும், குற்றம் சாட்டி உள்ளனர். ஆகையால் ,உடனடியாக மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். சுமார், 78 கழிப்பறை கட்ட அனுமதி பெற்று சுமார் 40-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு, கழிப்பறை கட்டாமல், பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஊராட்சி மன்றத் தலைவர், ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என்பதால் அரசு அதிகாரிகள் ஒத்துழைப்புடன் ஊழல் நடைபெற்றதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் நேரடி விசாரணையில், ஈடுபட்டு சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோரிடம் நேரடி விசாரணையில் ஈடுபட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாக கழிப்பறை கட்டித்தர வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்துஊராட்சி மன்ற துணைத்தலைவர் கூறும்போது, எங்கள் காடுபட்டி ஊராட்சியில் சுமார் எழுபத்தி எட்டு கழிப்பறைகள் கட்ட ஆறு மாதங்களுக்கு முன்பு வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து கணக்கெடுப்பு நடத்தி சென்றனர் பின்பு ஒவ்வொரு வீட்டிற்கும் வந்து கழிப்பறை கட்ட வீட்டு உரிமையாளரிடம் அனுமதி பெற்று சென்றனர்.

பின்னர் கழிப்பறை கட்டியதாக கணக்கு காட்டி சுமார் 40க்கும் மேற்பட்டவர்களின் பணம் ஒரு கழிப்பறை 12 ஆயிரம் வீதம் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பணத்தை அதிகாரிகள் உதவியுடன் ஆளுங்கட்சி சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் கையாடல் செய்துள்ளார். மேலும் கழிப்பறை கட்டிய குறைவான நபர்களுக்கும் ஊராட்சி மன்றத் தலைவர் தனது மகன் மற்றும் மகள் பெயரில் ஒப்பந்தப் பணி எடுத்து அந்த பணத்தையும் அவர்களே எடுத்துக்கொண்டனர். இது குறித்து கேள்வி எழுப்ப சென்ற என்னை அடியாட்களை வைத்து மிரட்டுகிறார், நான் ஆளுங்கட்சி சேர்ந்தவன் மேலிடத்தில் எனக்கு செல்வாக்கு உள்ளது. என்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் மிரட்டுகிறார். ஆகையால் மாவட்ட ஆட்சியர் எங்கள் ஊராட்சிக்கு நேரில் வந்து ஆய்வு செய்து பயனாளிகளுக்கு உரிய கழிப்பறை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், அடியாட்களை வைத்து மிரட்டும் ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இறந்தவர் பெயரில் கழிப்பறை கட்டியதாக மோசடி செய்து பணம் பெற்றுள்ளதாகவும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து காடுபட்டி ஊராட்சியை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில்,எங்களது வீட்டில் கழிப்பறை கட்ட ரூபாய் 2,000 லஞ்சம் கேட்டார்கள். அதையும் தருவதாக ஒப்புக் கொண்டேன் ஆனாலும் எனது வீட்டில் கழிப்பறை கட்டாமல் கட்டியதாகச் சொல்லி பணம் எடுத்து விட்டனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த பயனும் இல்லை இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் நேரடி விசாரணையில் ஈடுபட்டு எனவே வீட்டில் கழிப்பறை கட்ட அனுமதி தரவேண்டும் என்றார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!