மதுரை, அலங்காநல்லூர் அருகே பாதை கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

பாதை கேட்டு, அலங்காநல்லூர் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
காந்திகிராமம் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்கு பாதை கேட்டு சாலை மறியல்:
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், கல்லணை ஊராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமத்தில், தங்கள் குடியிருப்பு பகுதிக்கு பாதை வசதி வேண்டி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் பகுதிக்கு பாதை வசதிகள் ஏதும் செய்து தராமல் இருப்பதால் இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் அலங்காநல்லூருக்கு செல்ல வேண்டுமென்றால் 3 கிலோ மீட்டர் சுற்றித் தான் வர வேண்டி உள்ளது.
இதுகுறித்து ,ஊராட்சி மன்றத் தலைவர் சேது சீனிவாசனிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. கோரிக்கை மனுவை ஏற்றுக் கொண்ட ஊராட்சி மன்றத் தலைவர் அப்பகுதியில், ஆய்வு செய்து பட்டா இடத்தை தேர்வு செய்தார். இடத்தின் உரிமையாளரிடம் நேரடியாக சென்று அந்த இடத்தை கிராம பாதைக்கு வழங்க வேண்டும் என்றும் மாற்று இடம் தருவதாக உறுதியுடன் கோரிக்கை வைத்தார்.
அதை ஏற்றுக் கொண்ட அவர்கள் கிராம பாதைக்கு இடம் தருகிறோம் என்று கூறி, காலதாமதம் ஏற்படுத்தி வந்தனர். இதுகுறித்து, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ள நிலையில், ஆணையத்தின் சார்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நோட்டீசை பெற்றுக் கொண்ட ஊராட்சி நிர்வாகம், நேரில் சென்று விளக்கமும் அளித்தனர்.
தொடர்ந்து, ஆணையத்தின் சார்பாக அரசு அதிகாரிகளும் இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து வழங்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பாதைக்கான இடத்தினை, கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் தேர்வு செய்து வேலைகளிலும் இறங்கி உள்ளனர். நேற்று பாதைக்கு வழங்கப்படுவதாக உறுதி அளித்த அந்த அந்த பட்டா இடத்தில் செட் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த ஊராட்சி மன்றத் தலைவர் சேது சீனிவாசன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் சுப்பாராயல், அலங்காநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அசோக்குமார், திருவள்ளுவர், ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கிராமத்திற்கு பாதை ஒதுக்கி போக்குவரத்துக்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்த சாலை மறியலால் அலங்காநல்லூர்- தனிச்சியம் சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu