அலங்காநல்லூர் அருகே கலைஞரின் கனவு இல்ல திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே, கோவில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு தெரு பேச்சி அம்மன் கோவில் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு வழங்க கோரி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்த ஊராட்சியில், மொத்தம் எட்டு வார்டுகள் உள்ள நிலையில் 3000 திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள ஆதி திராவிடர் குடியிருப்பு பகுதியில் 50 வருடங்களுக்கு மேலாக வீட்டுமனை இல்லாமல் குடிசை வீடுகளிலும் பராமரிப்பு இல்லாத ஓட்டு வீடுகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள், அலங்காநல்லூர் யூனியன் அலுவலகம் மற்றும் வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் ஆகியவற்றில் வீட்டுமனை மற்றும் வீடு கட்டுவதற்கான உதவிகள் கேட்டு பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், தற்போது, தமிழக முதல்வர் அறிவித்துள்ள கலைஞர் கனவு இல்ல வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீட்டு மனை ஒதுக்க வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர் .
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், கோவில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆதிதிராவிடர் காலனி பகுதியில் வசித்து வரும் நாங்கள் 50 வருடங்களுக்கும் மேலாக குடியிருக்க வீடு இல்லாமல் தவித்து வருகிறோம். மேலும், இங்குள்ள பேச்சியம்மன் கோவில் பகுதியில் குடிசைகளிலும் சிறிய ஓட்டு வீடுகளிலும் மிகவும் சிரமத்துடன் குடியிருந்து வருகிறோம். மழைக்காலங்களில் வீடுகளுக்குள் மழை நீர் தேங்கி பாம்பு பல்லி போன்ற விஷப் பூச்சிகள் வரும் ஆபத்தான நிலை உள்ளது.
கனமழை பெய்தால், வீட்டின் மதிற் சுவர் இடிந்து விழுந்து இரவு நேரங்களில் குழந்தைகளை வைத்துக்கொண்டு குடியிருக்க முடியாத நிலையில் இருக்கிறோம். ஆகையால், மதுரை மாவட்ட ஆட்சியர் கருணை கொண்டு இங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் பொதுமக்களுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீட்டு மனை வழங்க வேண்டுமென கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu