சோழவந்தானில் துரிதமாக நடைபெறும் ரயில்வே மேம்பாலப் பணிகள்
மதுரை அருகே சோழவந்தானில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப்பணிகள் தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்கள் திருப்தி தெரிவித்தனர்
மதுரை மாவட்டம், சோழவந்தானில் ரயில்வே மேம்பால பணிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களால் நிதி ஒதுக்கப்பட்டு சுமார் 40 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. ஆனால் ,ஒரு சில அரசியல் காரணங்களுக்காக கடந்த எட்டு ஆண்டுகளாக பணிகள் முடிக்கப்படாமல் இருந்து வந்தது .
இதனால், சோழவந்தான் ரயில்வே கேட்டை கடந்து செல்லும் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமத்தினர் மிகவும் அவதிப்பட்டு வந்தனர் .முக்கியமாக, சோழவந்தான் பகுதிகளில் இருந்து வாடிப்பட்டி செல்லும் பொதுமக்கள் ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்காததால் ,மிகவும் சிரமமான முறையில் ரயில்வே கேட்டை கடந்து சென்று வந்தனர்.
இந்த நிலையில் ,கடந்த 2021 -ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தற்போதைய திமுக எம்எல்ஏவாக உள்ள வெங்கடேசன், திமுக ஆட்சிக்கு வந்தால், உடனடியாக ரயில்வே மேம்பால பணிகள் தொடங்கப்படும் என்றும் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்றும் தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தார்.
மேலும், சோழவந்தான் தொகுதி தேர்தல் பிரசாரத்திற்கு வந்த தற்போதைய வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியும், தனது பிரசாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக சோழவந்தான் ரயில்வே மேம்பால பணிகள் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்றும் உறுதியளித்திருந்தார்.
அதன் அடிப்படையில், திமுக ஆட்சி அமைந்த உடன் ரயில்வே மேம்பாலப் பணிகளும் அதனை ஒட்டி உள்ள அணுகு சாலை வேலைகளும் துரிதமாக நடைபெற்று, தற்போது முடியும் தருவாயில் உள்ளது.மேலும், அணுகு சாலை அருகில் இருந்த இடத்தினை கையகப்படுத்தி வேலைகள் மிகவும் துரிதமாக நடைபெறுவதாகவும் ஆகையால், திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்தபடி இன்னும் சில தினங்களில் வேலைகள் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது: கடந்த 8ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட சோழவந்தான் ரயில்வே மேம்பால பணிகள் கடந்த அதிமுக ஆட்சியாளர்களின் உள்கட்சி பிரச்னையால் வேலைகள் நடைபெறாமல் இருந்து வந்தது .கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திமுக ஆட்சி அமைந்த உடன் வேலைகள் தொடங்கப்பட்டு, இப்போது துரிதமாக வேலைகள் நடைபெற்று வருகிறது .
இதனால் ,சோழவந்தான் பகுதி மக்கள் வாடிப்பட்டி மற்றும் வட மாவட்டங்களுக்கு செல்வதற்கான சூழல் அமைந்துள்ளது.இதற்கு நடவடிக்கை மேற்கொண்ட வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோருக்கு, சோழவந்தான் வைகை ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பாகவும், சோழவந்தான் பொதுமக்கள் சார்பாகவும் மிகுந்த நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu