5 ஆண்டுகளாக இழுத்தடிக்கும் மேம்பால பணிகள்: குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி

மதுரை மாவட்டம், சோழவந்தானில் ரயில்வே மேம்பாலம் பணி ஆமை வேகத்தில் நடப்பதால், அப்பகுதி மக்களுக்கு அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால், இங்குள்ள மக்கள் குடிநீர் கேட்டு அவ்வப்போது, போராட்டம் நடத்துவதும், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தற்காலிக குடிநீர் வசதி செய்து கொடுப்பதும், வழக்கமாக நடந்து வருகிறது.
நேற்றைய முன் தினம், ஆசிரியர் காலனியில் வசிக்கும் மக்கள் குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷம் போட்டனர். போராட்டத்தில், ஈடுபட்ட அப்பகுதி மக்களிடம் பேரூராட்சி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குடிநீர் வசதி செய்து கொடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில், முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கலைந்து சென்றனர்.
ரயில்வே கேட் வடக்குப் புறம் வாடிப்பட்டி ரோடு, நகரி ரோடு, ஆகிய பகுதிகளில் அபிவிருத்தி பகுதிகளில், வீடுகள் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதிக்கு பேரூராட்சி சார்பாக குடிநீர் வசதி செய்து கொடுத்துள்ளனர். சுமார் ஐந்தாண்டு காலமாக ரயில்வே மேம்பால பணி ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இதனால், குறித்த காலத்தில் ரயில்வே மேம்பால பணிகளை முடித்தால்தான் பொது மக்களுக்கு தடையின்றி குடிநீர் வசதி செய்து தர முடியும் என இங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து மேம்பாலம் வேலை நடைபெறாமல், இடைவெளி விட்டு வேலை நடப்பதால், சோழவந்தான் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.
ரயில்வே மேம்பாலம் பணி தொடங்கியதிலிருந்து குடிநீர் குழாய்கள் பலமுறை சேதமடைந்துள்ளது. இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் குழாய் சேதம் ஏற்பட்டு அடிக்கடி குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாக வெங்கடேசன் எம்எல்ஏவிடம் பலமுறை கூறியும் பலனில்லை என்கின்றனர்.
இது குறித்து, கடந்த மாதம் வெங்கடேசன் எம்எல்ஏ ஆய்வு செய்து, பாலம் வேலையை விரைவில் முடித்துக் கொடுக்குமாறு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தகாரரிடம் பேசியுள்ளார். ஆனாலும் பலனில்லை,பேரூராட்சி நிர்வாகம் முறையாக பொதுமக்களுக்கு குடிநீர் வசதி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu