அலங்காநல்லூரில் பாசன நீருடன் கழிவு நீர் கலப்பதாக விவசாயிகள் புகார்

அலங்காநல்லூரில் பாசன நீருடன் கழிவு நீர் கலப்பதாக விவசாயிகள் புகார்
X

விவசாய நிலங்கள் முழுவதும் குப்பை கிடங்காக காட்சியளிக்கிறது.

பாசனக் வாய்க்காலில் சாக்கடை கழிவுநீர் கலப்பதால், விவசாய நிலங்கள் குப்பை கிடங்காக காட்சியளிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

முதல்போக சாகுபடிக்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி பகுதியில் தேங்கும் சாக்கடை கழிவுகள் நேரடியாக முனியாண்டி கோவில் பின்புறம் உள்ள விவசாய நிலங்களில் கலக்கிறது. கேட்டுக்கடை சின்ன ஆற்று பிரதான கால்வாயில் இருந்து பிரியும் 6-வது மடை கால்வாய் தண்ணீரும் அப்பகுதியில் செல்கிறது.

இந்த பாசனக் வாய்க்காலில் சாக்கடை கழிவுநீர் கலப்பதால், நேரடியாக விவசாய நிலங்கள் முழுவதும் பாய்ந்து குப்பை கிடங்காக காட்சியளிக்கிறது. தற்போது, விவசாயிகள் விவசாயப் பணியில் முழுக்கவனம் செலுத்தி வரும் நிலையில், பிளாஸ்டிக், மருத்துவ கழிவுகள், உடைந்த மதுபாட்டில்கள் உள்ளிட்ட அனைத்து கழிவுகளும் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களில் ஆறாக ஓடி பரவிக் கிடக்கிறது. இதனால், விவசாய நிலங்களில் நடவு பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், விவசாய நிலத்தில் கால் வைத்து வேலை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகமும், பேரூராட்சி நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுத்து விவசாய நிலங்களில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி விளைச்சல் நிலங்களை பாதுகாக்க வலியுறுத்தி விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்....

Tags

Next Story