அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம்: அமைச்சர்கள் ஆய்வு

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதானம் அமைய உள்ள இடத்தை அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி இன்று ஆய்வு செய்தனர்.
அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் அமையவுள்ள இடத்தினை பொதுப்பணித் துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் அமையவுள்ளது. இந்த இடத்தில் தமிழக பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.
இந்நிகழ்வினை தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் தென் தமிழக பகுதிகளிலே தமிழர்களின் பாரம்பரியமான பண்பாட்டு அடையாளமாக திகழ்கிற ஜல்லிக்கட்டு விளையாட்டிற்காக உலக தரத்தில் புதிய ஜல்லிக்கட்டு அரங்கு அமைக்கப்படும் என, சட்டமன்றத்தில் அறிவித்தார்.
அதன்படி அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் ரூ.44 கோடி திட்ட மதிப்பீட்டில் ஏறத்தாழ 16 ஏக்கர் பரப்பளவில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைய இருக்கிறது.
மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகள் பரிசோதனைக் கூடம் காளைகள் பதிவு செய்யும் மையம் அருங்காட்சியகம் மாடுபிடி வீரார்கள் உடை மாற்றும் அறை தற்காலிக விற்பனைக் கூடங்கள் பொருள் பாதுகாப்பு அறை, தங்கும் அறை என சிறப்பான முறையில் அரங்கம் அமைய இருக்கிறது.
குறிப்பாக நுழைவாயில் வளைவு, காளைகள் சிற்பக்கூடம் உட்புற சாலைகள், மழைநீர் வடிகால் வசதி, செயற்கை நீரூற்று, புல் தரைகள் மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆகியவை அமைய இருக்கிறது.இப்பணிகள் விரைவாகவும் தரமாகவும் நடைபெறுகிறதா என்பது குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இவ்வரங்கப் பணிகள் தென்னக மக்கள் பாராட்டுகின்ற அளவிற்கு சிறப்பான முறையில் அமையும். சுற்றுச்சுவர் எழுப்புவதற்கு திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனை தமிழ்நாடு முதலமைச்சர் அனுமதி பெற்று விரைவில் பணிகள் தொடங்கும்.
அதேபோல தனிச்சியம் அலங்காநல்லூர் சாலையிலிருந்து ஜல்லிக்கட்டு அரங்கு சாலையை இணைக்க சுமார் 3.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.22 கோடியில் திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு நிதித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.அனுமதி கிடைத்தவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், சட்டமன்ற உறுப்பினர்கள் தளபதி,வெங்கடேசன் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu