முல்லைப்பெரியாறு அணை பலமாக இல்லையா? கேரள அமைச்சருக்கு ஆர்பி உதயகுமார் கண்டனம்
முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்.
முல்லைப் பெரியார் அணை பலவீனமாக உள்ளது என்று கேரளா நீர்வளத்துறை அமைச்சர் விஷ விதையை பரப்பலாமா? என ஆர்.பி உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பாக உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி கச்சைகட்டி ஊராட்சியில், நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் வி.எம். காளிதாஸ் தலைமை தாங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மகேந்திரன், தவசி, தமிழரசன், மாணிக்கம், கருப்பையா, மாநில நிர்வாகிகள் ராஜேஷ் கண்ணா, வெற்றிவேல், தனராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட பாசறை துணைச் செயலாளர் எம்.கே.மணிமாறன் வரவேற்றார்.
இதில் உறுப்பினர் அடையாள அட்டையை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர் பி உதயகுமார் வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மனித புனிதர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட இந்த புனித இயக்கத்தை மறைந்த பொதுச்செயலாளர் ஜெயலலிதா மூன்றாம் பெரிய இயக்கமாக உருவாக்கி, மக்களால் நான், மக்களுக்காக நான் என்று தமிழக மக்களுக்காக தவவாழ்வை மேற்கொண்டு, எல்லோரும் எல்லா வளமும் பெற வேண்டும். இங்கு இல்லாமல் இல்லை என்ற நிலை உருவாக வேண்டும் என்ற பொன்மொழிக்கேற்ப,மாதந்தோறும் 20கிலோ அரிசி திட்டம், ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம்,உழைக்கும் பெண்களுக்கு மிக்சி கிரைண்டர், மின்விசிறி திட்டம், கிராமப்புற பெண்கள் மேம்பாடு அடைய கறவை மாடுகள், ஆடுகள் திட்டம், ஏழை எளிய மக்களின் பசிப்பிணி போக்க அம்மா உணவகம், கர்ப்பிணி பெண்களுக்கு உதவி தொகை திட்டம், உழைக்கும் பெண்களுக்கு இருசக்கர வாகன திட்டம், குழந்தைகளுக்கு அம்மா பரிசு பெட்டகம்,மாணவச் செல்வங்களுக்கு மடிக்கணினியுடன் 14 வகை கல்வி உபகரணங்கள், இப்படி தமிழக மக்களுக்காக திட்டங்களை வாரி வாரி கொடுத்தார்.
தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சனையான காவேரி,முல்லை பெரியார் ஆகியவற்றில் மாபெரும் சட்டப் போராட்டம் நடத்தி தமிழகத்தின் இழந்த உரிமையை மீட்டு கொடுத்து இதன் மூலம் விவசாயிகளுக்கு பாலை வார்த்தது மட்டுமல்லாது,இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் தமிழகம் தான் என்று ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த தமிழர் குலசாமி, ஜெயலலிதாவை அமைச்சர் அன்பரசன் நாகூசாமல் பேசியது ஒவ்வொரு தமிழர்கள் நெஞ்சில் ஈட்டி பாய்ந்தது போல் உள்ளது.
அம்மாவைப் பற்றி தா.மோ அன்பரசன் பேசியதற்கு ஒட்டுமொத்த தமிழினமே கடும் கோபத்தில் உள்ளது. அரசியல் பிழைப்பிற்காக அமைச்சர் அன்பரசன் பேசியதற்கு கழக அம்மா பேரவை கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை கழக அம்மா பேரவை வலியுறுத்துகிறது.
2 கோடி தொண்டர்களின் இதய தெய்வமாக திகழும் புரட்சித்தலைவி அம்மாவை பற்றி பேசுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும், தொடர்ந்து இது போன்று வாய்க்கொழுப்புடன் பேசினால் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணை பெற்று, கழக அம்மா பேரவை தகுந்த பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஆர்பி உதயகுமார் கூறியதாவது:-
ஜெயலலிதா மீது நாக்கூசாமல் பேசிய அமைச்சர் தா.மோ அன்பரசனுக்கு கண்டனம் தெரிவித்து பதவியை நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதுரையில் நாள் ஒன்றுக்கு 1.80 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்தாலும், 2 லட்சம் லிட்டருக்கு மேல் விற்பனை நடக்கிறது. தற்போது இரண்டு நாட்களாக பத்து ரூபாய்க்கு விற்பனையாகும் 200 மில்லி லிட்டர் கவ் மில்க்கும்,22 ரூபாய்க்கு விற்பனையாகும் 1/2 லிட்டர் டிலைட் பால் ஆகியவை கெட்டுப் போய் கட்டி சேர்ந்த 10,000 லிட்டர் பாலை கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது.நல்ல வேலை அந்த பாலை மக்கள் உபயோகம் செய்யாமல் இருந்ததால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை இது நெஞ்சை உலுக்கும் வைக்கும் வகையில் உள்ளது இது குறித்து அமைச்சருக்கு தெரியுமா?
முல்லைப் பெரியாறு குறித்து இடுக்கி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தி மக்களுக்கு தவறான செய்திகள் கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் முல்லை பெரியார் அணை உடைந்து விடும் என்ற வதந்தி செய்தியை கேரளா அரசியல்வாதிகள் பரப்பி வருகிறார்கள்.
முல்லை பெரியார் அணையை உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி வல்லுநர்கள், ஆய்வு குழுக்கள், துணைக் குழுக்கள் என தொடர் ஆய்வுகளை நடத்தி அதன் ஆய்வறிக்கையை மத்திய அரசுக்கு சமர்ப்பித்து வருகிறார்கள். இரு மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளது.புரட்சித்தலைவி அம்மா கடந்த 2014 ஆம் ஆண்டு முல்லை பெரியார் அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்,பேபி அணையை பழுது பார்க்கப்பட்ட பின் 152 அடியாக உயர்த்தலாம் என்ற நிரந்தர தீர்ப்பினை பெற்றுத் தந்தார்,கேரளா முதலமைச்சர் பிரணாய் விஜயன் அணை பலமாக இருக்கிறது என்று கூறுகிறார்.
ஆனால் கடந்த வாரம் அணை பலவீனமாக உள்ளது ,மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கேரளா நீர்வளத்துறை அமைச்சர் பேசுகிறார், ரகசிய காப்பு பிரமாணம் செய்து பதவி ஏற்ற அமைச்சர் தவறான கருத்தை சொல்லி மக்களை அச்சத்தை ஏற்படுத்தலாமா ? இரு மாநில நட்பில் விரிசில் ஏற்பட வைக்கலாமா? தொடர்ந்து கேரளா நீர்வளத்துறை அமைச்சர் விஷ விதையை பரப்பி வருகிறார்.
ஆனால் அணை பலமாக உள்ளது என்று தமிழக அரசு சொல்ல முன்வரவில்லை, முல்லை பெரியார் என்பது தென் மாவட்ட மக்களின் வரப்பிரசாதமாகும்.தற்போது கூட லோயர் கேம்ப் பகுதியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். ஆனால் அவர்களை கைது செய்கிறார்கள்.இதுவரை முதலமைச்சர் முல்லை பெரியார் அணை குறித்து வாய் திறக்க மறுக்கிறார்,ஜீவாதார உரிமை குறித்து முதலமைச்சர் மக்களுக்கு அச்சத்தைப் போக்க விளக்கம் அளிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் சொல்ல வேண்டும்.
எங்களிடம் அதிகாரம் இல்லை. ஆனால் அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் கும்பகர்ணனை போல் தூங்குகிறார். தனது அரசின் பலவீனத்தை மறைக்க மடைமாற்றம் செய்ய விளம்பர வெளிச்சத்தில் ஆட்சி நடத்துகிறார். முல்லை பெரியாறு அணைகட்ட கேரளா அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. அப்படி செய்தால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும்.தமிழகத்தில் பேருந்துகள் எல்லாம் மோசமாக உள்ளது. தற்போது மழைக்காலங்களில் குற்றால அருவி போல் பேருந்தில் தண்ணீர்அருவி போல் கொட்டுகிறது. இனியாரும் குற்றாலத்துக்கு செல்ல வேண்டாம், அரசு பஸ்ஸில் சென்றாலே நமக்கு குற்றாலம் போல தண்ணீர் வரும்.
உளவுத்துறை வரும் தகவலை முதலமைச்சர் பார்க்கிறாரா? தற்பொழுது எதிர்க்கட்சிகள், சங்கங்கள் என்று கோரிக்கையை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள், விவசாயிகள், மாணவர்கள்,தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள் இது குறித்து என்ன நடவடிக்கை எடுத்துள்ளார் முதலமைச்சர்?அது மட்டுமல்ல அது மேகதாது அணைகட்ட கர்நாடகா முயற்சிக்கிறது இதுகுறித்து வாய் திறக்கவில்லை ?வாக்கு வங்கிக்காக திமுக ராமரையும் கூப்பிடுவார்கள், அனுமாரையும் கூப்பிடுவார்கள். முருகனை கூப்பிடுவார்கள், அல்லாவை கூப்பிடுவார்கள், இயேசுவை கூப்பிடுவார்கள், தற்போது பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படுகிறது யார் கோரிக்கை வைத்தார்கள். யாருமே கோரிக்கை வைக்கவில்லை.கடவுளை கூட விளம்பரத்திற்காக பயன்படுகிறார்கள். முருகன் கூட இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்.
தற்பொழுது கருணாநிதி படம் பொறித்த நூறு ரூபாய் நாணயத்தை வெளியிடப்படுகிறது, அவர் நாணயத்தை காப்பாற்ற முதலமைச்சர் நாணயத்தை வெளியிடுகிறா? தற்போது மத்திய, மாநில அரசுகள் சண்டைக்கோழி போல சண்டை போட்டு வருகிறது தற்போது நாணயத்தை வெளியிட மத்திய அரசு செவி சாய்த்து உள்ளது இரண்டு அரசுகளும் மக்களை ஏமாற்றி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் கட்சிநிர்வாகிகள் சந்திராபோஸ்,திவ்யா,அழகுமலைக்கண்ணன், செந்தில், மூர்த்தி, குழந்தைவேலன், பிச்சை, உமையாண்டி, தங்கய்யா, சசி,ரமேஷ், தர்மர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், கச்சைகட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ஆலயமணி நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu