சோழவந்தான் அருகே இரும்பாடி காசி விஸ்வநாதர் ஆலய பாலாலய பூஜை
சோழவந்தான் அருகே இரும்பாடியில் அருள்மிகு காசி விஸ்வநாதர் சுவாமி மற்றும் விசாலாட்சி அம்மன் திருக்கோவிலில் பாலாலயம் நடைபெற்றது
இரும்பாடி அருள்மிகு காசி விஸ்வநாதர் சுவாமி மற்றும் விசாலாட்சி அம்மன் திருக்கோவிலில் பாலாலயம் நடைபெற்றது
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு காசி விஸ்வநாதர் சுவாமி மற்றும் விசாலாட்சி அம்மன் கோவில் பராமரிப்பு இல்லாமல் சிதலமடைந்து இருந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த கோவிலுக்கு வந்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு கோவில் விரைவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில், அதன் அடிப்படையில் பாலாலய விழா நடைபெற்றது.
காலை கோ பூஜை விக்னேஸ்வர பூஜை உடன் யாகசாலை நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து, மகாபூர்ணாஹூதி நடைபெற்று பாலாலய நிகழ்வில் புனித நீர் ஊற்றும் நிகழ்வு நடைபெற்றது. தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஊராட்சி மன்றத் தலைவர் பண்ணைசெல்வம், ஒன்றியக் கவுன்சிலர் முத்துப்பாண்டி ,
கிராமத் தலைவர் நாகேந்திரன், ஞானகுரு, திருக்கோவில் ஆய்வாளர் ஜெயலட்சுமி, நிர்வாக அதிகாரி பாலமுருகன், ஆலய பணியாளர்கள் வெங்கடேசன், கிராம முக்கிய பிரமுகர்கள் மணிகண்டன், நாகரத்தினம் பிள்ளை, ராஜா மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் கோவில் பணியாளர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
பாலாலயம் என்றால் என்ன... 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆலயங்களில் கும்பாபிஷேகம் செய்வது வழக்கம். ஒருசில ஆலயங்களில் புனரமைப்பு பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்வார்கள். இவற்றை முறையே ஜீர்ணோத்தாரண மஹாகும்பாபிஷேகம், புனருத்தாரண மஹாகும்பாபிஷேகம் என்றும் அழைப்பார்கள். இந்த வகையிலான கும்பாபிஷேகம் செய்வதற்கு முன்னர் ஆலயத்தில் உள்ள மூர்த்தங்களின் சாந்நித்யத்தை அத்திப்பலகையில் உருவம் வரைந்து அதன் மீதோ அல்லது உற்சவர் விக்கிரகத்தின் மீதோ மாற்றுவார்கள்.
அதாவது மூலஸ்தானத்தில் உள்ள தெய்வங்களின் சக்தியை அந்த தெய்வத்தின் உருவம் வரையப்பட்ட அத்திப்பலகையின் மீது மாற்றி அந்தப்பலகையை ஆலய வளாகத்திற்குள் குடில் அமைத்து அங்கே வைத்து நித்தியப்படி பூஜையை தவறாமல் செய்து வருவார்கள். அதன்பிறகு மூலஸ்தானத்திற்குள் புனரமைப்பு பணிகளைச் செய்வதற்கு பணியாட்கள் உள்ளே செல்வார்கள். இவ்வாறு ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தெய்வங்களின் சாந்நித்யத்தை அத்திப்பலகையின் மீதோ, உற்சவ விக்கிரகங்களின் மீதோ மாற்றுகின்ற நிகழ்வினை பாலாலயம் அல்லது பாலஸ்தாபனம் என்று சொல்வார்கள்.
பாலாலயம் செய்யப்பட்டுள்ள ஆலயத்தில் மூலவர் சந்நதியில் பூஜை எதுவும் நடைபெறாது. தனியாக ஒரு குடிலில் சாந்நித்யம் பெற்ற அத்திப்பலகையையோ அல்லது உற்சவர் விக்ரகத்தையோ வைத்து நித்யப்படி பூஜைகளையும், தீபாராதனைகளையும் செய்வார்கள். கும்பாபிஷேகம் செய்யும்போது இந்த அத்திப்பலகையில் உள்ள சாந்நித்யத்தை யாகசாலையில் வைக்கப்பட்டிருக்கும் கும்ப கலசங்களில் மாற்றுவார்கள்.
யாகசாலையில் பூஜிக்கப்பட்ட கும்ப கலசங்களில் உள்ள நீரை மூலவர் மற்றும் இதர தெய்வங்களின் சிலைகளின் மீது அபிஷேகம் செய்யும்போது அந்தச் சிலைகள் மீண்டும் சாந்நித்யம் பெறும். பாலாலயம் என்கிற நிகழ்வும் ஒரு சிறிய அளவிலான கும்பாபிஷேகத்தைப் போலவே நடைபெறும். ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகளின் மீதான சாந்நித்யத்தை வேறு வடிவிற்கு மாற்றும் நிகழ்வுதான் பாலாலயம் அல்லது பாலஸ்தாபனம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu