பலத்த மழையால் சோழவந்தான் வட்டாரத்தில் 200 ஏக்கர் வாழைப்பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை

பலத்த மழையால் சோழவந்தான் வட்டாரத்தில் 200 ஏக்கர் வாழைப்பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை
X
கனமழையால் தாமோதரம்பட்டியில் புளியமரம் சாய்ந்து விழுந்ததில் 75 வயதான தோட்டக் காவல்காரர் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், சோழவந்தான் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழைக்கு லட்சக்கணக்கான வாழை மரங்களும் நூற்றுக்கு மேற்பட்ட தென்னை மரங்களும் புளியமரங்கள் வேரோடு சாய்ந்தன.

மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் இஅனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த காற்று இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதில், வாழை மரங்கள் தென்னை மரங்கள் புளிய மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இந்த கனமழைக்கு, தாமோதரன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த தோட்ட காவல்காரர் ராமசாமி( 75 ) மீது மரம் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சோழவந்தான், தென்கரை, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், காடுபட்டி, புதுப்பட்டி, உள்பட இப்பகுதியிலுள்ள கிராமங்களில் நெல், வாழை, தென்னை, வெற்றிலை கொடிக்கால் விவசாயம் செய்து வருகின்றனர். இதில், சுமார் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சுமார் 100 தென்னை மரங்கள் மற்றும் மிகவும் பழமை வாய்ந்த 5 புளிய மரங்களும் வேரோடு சாய்ந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்களும் போலீசாரும் வருவாய்த் துறையினரும் ஆங்காங்கே விழுந்த மரங்களை அப்புறப்படுத்தினர். மன்னாடிமங்கலம் பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சுமார் 100 மீட்டருக்கு மேல் உள்ள மின் வயர்கள் சேதம் அடைந்துள்ளது.

சோழவந்தான் மின் வாரிய பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மின் கம்பங்கள் மற்றும் மின் வயர்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், இந்த கனமழைக்கு புதுப்பட்டி, காடுபட்டி ஆகிய பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் சுவர் இடிந்ததுடன் மேற்கூரைகளும் சேதமடைந்துள்ளது.

தோட்டக்கலை உதவி அலுவலர் கவிமாலா, முள்ளிப்பள்ளம் கிராம நிர்வாக அலுவலர் மணிவேல், மன்னாடிமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் முத்துகுமரன், கிராம உதவியாளர்கள் ஆகியோர் சேதமடைந்த வெற்றிலை கொடிக்கால், வாழை மரங்கள், தென்னை மரங்கள், சேதமடைந்த வீடுகளையும் கணக்கு எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தாமோதரன்பட்டியில் மரம் விழுந்து பலியான முதியவர் ராமசாமி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் வீடுகள் சேதமடைந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வெங்கடேசன் எம்எல்ஏ ஆறுதல் கூறினார்.

முள்ளிப்பள்ளம் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் மார்நாட்டான் தலைமையில் விவசாயிகள், வயல் பகுதிகளுக்கு செல்ல சாலை அமைத்து தர வேண்டும் என்றும், வெற்றிலைக் கொடிக்கால் பகுதிகளில் தண்ணீர் அதிகமாக தேங்கி உள்ளதால், தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எம்எல்ஏ-விடம் கோரிக்கை வைத்தனர்.

முன்னதாக, சோழவந்தான் பேரூராட்சி அலுவலகம் மற்றும் சோழவந்தான் அரசு மருத்துவமனை ஆகியவற்றை சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில், பேரூராட்சி செயல் அலுவலர் ஜுலால் பானு, இளநிலை உதவியாளர்கள், பணியாளர்கள், அரசு மருத்துவர்கள், பணியாளர்கள், மற்றும் அரசு அதிகாரிகள் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி