அதிமுக எம்எல்ஏ வை தன்னை வந்து பார்க்க சொன்ன வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்
தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் சோழவந்தான் அருகே ஆய்வு பணிகள் மேற்கொண்டார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடு பட்டி பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சாலை அமைக்கப்படாமல் இருந்து வந்தது .
பொதுமக்கள் தரப்பில் பல முறை மாவட்ட நிர்வாகத்திடமும் சட்டமன்ற உறுப்பினரிடமும் மனுக்கள் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் சாலையை பார்வையிட்டு விரைவில் சாலை அமைத்து தரப்படும் என, பொது மக்களிடம் வாக்குறுதி அளித்து சென்றனர் .
மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை சாலை அமைக்கப்படாத நிலையில்,இது குறித்து பொதுமக்கள் பல்வேறு புகார் மனுக்களை அளித்து இருந்தனர் .
இந்த நிலையில், இன்று காலை தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் இந்த பகுதியை பார்வையிட்டு சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிகளுடன் வருகை தந்திருந்தார் .
அப்போது அருகில், விக்கிரமங்கலம் பகுதியைச் சேர்ந்த திமுக மாவட்ட நிர்வாகி விக்கிரமங்கலம் பகுதியில் இதேபோன்று வனத்துறை பகுதியில் சாலை அமைக்க வேண்டும் என, அமைச்சரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்துக் கொண்டே இருந்தார். அதற்கு வனத்துறை அமைச்சர் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினரிடம்,இவர் சொல்லும் பகுதி எந்த தொகுதியில் வருகிறது என்று கேள்வி கேட்டார். அதற்கு அருகில் உசிலம்பட்டி தொகுதியில் வருவதாக திமுக நிர்வாகி கூறினார் .
உடனே அந்த தொகுதியின் எம்.எல்.ஏ. யார் என, நிர்வாகியிடம் கேட்ட அமைச்சரிடம் அது அதிமுக சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி எனக் கூறினார்.
இதற்கு வனத்துறை அமைச்சர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தொகுதி என்றால், நான் வேலை பார்க்க முடியாது அந்த எம்.எல்.ஏ. வை என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள் அதற்கு பிறகு வேலை பார்ப்பது சம்பந்தமாக பரிசீலிக்கலாம் என்று கூறினார் .
வனத்துறை அமைச்சர் தமிழகம் முழுவதற்கும் அமைச்சர் என்ற முறையில் கட்சி பாகுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானவர் ஆனால் அதிமுக எம்எல்ஏவின் தொகுதியில் வேலை நடக்காது என்றும் எம்எல்ஏ வை என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள் என்றும் கூறியது பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து அங்கிருந்த பொதுமக்கள் கூறுகையில் 30 ஆண்டுகளாக இந்த ரோட்டை போடவில்லை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இரண்டு முறை எம் எல் ஏ வந்து ரோட்டை பார்வையிட்டு சென்றும் போடவில்லை. இப்போது வந்திருக்கிறார்கள். இனி எப்போது போடுவார்களோ என்றும் , மேலும், இங்குள்ள 200 பேர்களுக்கு வீடுகளுக்கு முதலில் பட்டா வழங்க வேண்டும் பின்பு தான் இந்த ரோட்டை போட வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu