சோழவந்தானில் நீண்ட இழுபறிக்குப்பின் திறக்கப்பட்ட மேம்பாலம்
சோழவந்தானில் திடீரென திறக்கப்பட்ட மேம்பாலத்தால் மக்களின் நீண்ட நாள் சிரமங்கள் முடிவுக்கு வந்துள்ளது
சோழவந்தானில் 10 ஆண்டுகளாக பொதுமக்களின் பொறுமையை சோதிக்க வைத்துக்கொண்டிருந்த ரயில்வே மேம்பாலம திறப்பு விவகாரம் முடிவுக்கு வந்து திறக்கப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தானில் கடந்த 2014ல் அதாவது 9 வருடங்களுக்கு முன்பாக, ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி தொடங்கப்பட்டு தற்போது வரை நடைபெற்று வருகிறது.
சோழவந்தான் வாடிப்பட்டி சாலையில், நடைபெற்று வந்த இந்த ரயில்வே மேம்பால பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டதால், வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்திற்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் பொது மக்கள் சிரமப்பட்டு வந்த நிலையில், சோழவந்தான் விரிவாக்க பகுதிகளான, பசும்பொன் நகர், டீச்சர்ஸ் காலனி,நகரி, ஆலங்கட்டாரம் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு வாசிகள் சோழவந்தான் நகர் பகுதியில் உள்ள மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவும் சிரமம் ஏற்பட்டது.
இந்த நிலையில், 9 வருடங்களாக நடந்து வந்த மேம்பால பணிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக முடிந்த நிலையில், நிர்வாக காரணங்களால் பாலம் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில்,நேற்று முன்தினம் சோழவந்தான் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இதற்காக பாலம் திடீரென திறக்கப்பட்டது இதைப் போக்குவரத்துக்கு திறந்து விட்டது யார் என்பதில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. பொதுமக்களால் தடுப்புக்கட்டைகள் அப்புறப்படுத்தப்பட்டதா அல்லது நெடுஞ்சாலைத்துறையினரோ காவல்துறையினரோ இதைச்செய்தார்களா என்கிற கேள்வி எழுந்து நிற்கிறது.
மேலும், பாலத்தின் முன் பகுதியில் அதிகாரிகள் தடுப்புகளை அமைப்பதும், அதை இரவு நேரங்களில் பொதுமக்கள் அகற்றுவதும் தொடர்கதையாக இருந்து வந்த நிலையில், இந்தப் பாலம் எந்தவித சடங்கு சம்பிரதாய விழா ஏதுமின்றி திடீரென பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டதால் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில்,சோழவந்தான் பேரூராட்சியில் உள்ள, 18 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பையானது, வாடிப்பட்டி சாலையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுவது வழக்கம்.அவ்வாறு சேகரிக்கப்படும் குப்பை ஆனது, ரயில்வே கேட்டை தாண்டி செல்ல முடியாத நிலையில், சுமார் ஐந்து கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்து வந்ததால் மறைமுகமாக பேரூராட்சி நிர்வாகத்தினரும்,பாலத்தை திறந்து விட்டதில் நிம்மதி அடைந்தனர .
மேலும்,விரைவில் பாலத்தின் அடியில் கனரக வாகனங்கள் செல்லும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அகலப்படுத்தி அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையம் வந்து செல்ல வழி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu