சோழவந்தானில் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை..!
சோழவந்தானில் ஆக்கிரமிப்பால் சாலையில் சிக்கித் திணறும் வாகனங்கள்
சோழவந்தான் :
மதுரை மாவட்டம், சோழவந்தானில் ஆக்கிரமிப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, ஜெனகை மாரியம்மன் கோவில் சன்னதி, பெரிய கடைவீதி, மார்க்கெட் ரோடு, சின்ன கடை வீதி, வட்ட பிள்ளையார் கோவில், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதி ஆகிய பகுதிகளில், தினந்தோறும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக, ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதி மற்றும் மார்க்கெட் ரோடு பகுதிகளில் வணிக நிறுவனங்கள் வைத்திருப்பவர்கள் தங்களின் கடை முன்பாக சாலையை ஆக்கிரமித்து பொருட்கள் வைத்திருப்பதாலும், ஆட்டோக்களை சாலையில் நிறுத்துவதாலும், பேருந்து செல்லவேண்டிய சாலை ஓரங்களில் மறிக்கப்பட்டு கடை சாலையை பாதி மூடும்படியாக வைத்திருப்பதாலும் தினந்தோறும் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா இன்னும் சில தினங்களில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில், சோழவந்தான் நகருக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் வாய்ப்புள்ளதால், சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் பொது மக்களின் நலன் கருதி உடனடியாக சாலையை ஆக்கிரமித்து கடை வைத்திருப்பவர்களுக்கு தகவல் தெரிவித்து அவர்களாகவே ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்த வேண்டும். இல்லை என்றால் பேரூராட்சி சார்பில் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர் .
மேலும், மார்க்கெட் ரோடு பகுதியை ஒருவழி பாதையாக மாற்றவும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போக்குவரத்து நெருக்கடி காரணமாக போக்குவரத்து போலீசாருக்கும் பொது மக்களுக்கும் தினசரி ஒரு சில பகுதிகளில் வாக்குவாதங்கள் ஏற்படுவதும், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களிடம் வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், தொடர்கதையாக நடந்து வருவதால், அரசு, இதில் கூடுதல்கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, கேட்டுக் கொண்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu