சோழவந்தான் அருகே குடிநீர் தட்டுபாடு: மாவட்ட நிர்வாகம் தலையிட கோரிக்கை
குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவதாக முன்னாள் காவலர்
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மன்பட்டி கிராமத்தில் வசிப்பவர் பாக்கியம் . இவர், காவல் துறையில் பணியாற்றி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றிருந்த நிலையில், ஒரு கை மற்றும் ஒரு கால் செயல் இழந்த தனது மனைவியுடன் பொம்மன்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறார்.
இவரது பிள்ளைகள் வெளியூரில் வசிக்கும் நிலையில், நோய்வாய் பட்ட தனது மனைவியை பராமரிக்கும் முழு பொறுப்பையும் தனது தோளில் சுமந்து வாழ்ந்து வருகிறார் .
இந்த நிலையில், மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்கிய கருப்பட்டி ஊராட்சி நிர்வாகம் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக குடிநீர் வழங்காததால், குடிநீருக்காகவும் மற்றும் தனது மனைவியின் பராமரிப்பிற்காகவும், மூன்று கிலோமீட்டர் தூரம் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்று, தண்ணீர் எடுத்து வாழ்ந்து வரும் பரிதாப நிலையில் உள்ளார் .
இது குறித்து, கூறும்போது, நான் கடந்த 1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் பணியில் சேர்ந்து 35 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்று கருப்பட்டி அருகே பொம்மன்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறேன் . எனது மனைவியின் ஒரு கை ஒரு கால் செயல் இழந்த நிலையில் அவரின் முழு பராமரிப்பும் எனது தோளில் விழுந்தது. எனது பிள்ளைகள் வெளியூரில் வசித்து வரும் நிலையில், எனது மனைவியை உடன் இருந்து பராமரித்து வருகிறேன்.
இந்த நிலையில், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்கிய கருப்பட்டி ஊராட்சி நிர்வாகம் இணைப்பு வழங்கி ஒரு வருடத்திற்கு மேலாகியும் குடிநீர் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால், குடிநீருக்காகவும் மற்ற தேவைகளுக்காகவும் தண்ணீர் இன்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறேன்.
இது குறித்து, கருப்பட்டி ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டேன். எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த வருடம் நவம்பர் மாதம் இதுகுறித்து வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவரிடம் நேரில் சென்று மனு அளித்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu