மதுரை அருகே கனிம வள திருட்டைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சேந்தமங்கலம் ஊராட்சி பொந்துகம்பட்டியில் செயல் படும் செம்மண் குவாரி
மதுரை அருகே விளை நிலங்களை அழித்து, திமுகவினர் சட்டவிரோத கனிமவள கொள்ளையாம். குவாரியின் அனுமதியை ரத்துசெய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சேந்தமங்கலம் ஊராட்சி பொந்துகம்பட்டியில் செயல் படும் செம்மண் குவாரிகளால் குடி நீர், விவசாயம் உட்பட வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இக்கிராமத்தில், விவசாயப்பகுதியில் திமுகவினர் சிலர் 2 ஆண்டுகளாக செம்மண் குவாரி அமைத்து இயந்திரங்கள் மூலம் சட்ட விரோதமாக சுமார் 20 அடி ஆழத்திற்கு அதிகளவில் மண் அள்ளி வருகின்றனர். இதற்காக கண்மாய்களுக்கு செல்லும் நீர் வரத்து ஓடைகளை ஆக்கிரமித்துள்ளனர்.இதனால், பொந்துகம்பட்டி கிராமத்தில் குடி நீர், விவசாயம் உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் பாதிக்கபடுவதாக கூறி கிராம பொதுமக்கள் குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
விவசாயி முத்துச்சாமி கூறியதாவது: எங்கள் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தனியார் நிறுவனத்தை சேர்ந்த சிலர் வீட்டடி மனை ( பிளாட்) அமைப்பதாக கூறி வறுமையில் உள்ள விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கி ஏமாற்றினர். ஆனால், செம்மண் லாபம் கொழிக்கும் வியாபாரமாக மாறியதால், மாமரங்கள் நிரம்பிய தோட்டங்களை அழித்து, செம்மண்குவாரிகள் நடத்துகின்றனர்.
செங்கல் காளவாசலுக்கு மண் எடுப்பதற்கு கூட, 3 அல்லது 5 அடிக்குள்தான் மண்அள்ளமுடியும். ஆனால், இங்கே உரிய அனுமதியின்றி 25 அடிக்கு மேல் அதிக ஆழத்தில் மண் அள்ளி கனிம வள கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.இதனால் ,நிலத்தடிநீர் குறைந்து போர்வெல் கிணறுகள் பழுதடைந்துள்ளது. நீரோடைகளை ஆக்கிரமித்துள்ளதால், கண்மாய்களுக்கு நீராதரமின்றி, விவசாய கிணறுகளும் வறண்டு, பாசனத்திற்கு தண்ணீரில்லை.
கால் நடைகள் மேய்ச்சலுக்கு தீவனமின்றி தவிக்கின்றன. இதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும். மேலும் செம்மண் குவாரிகளின் அனுமதியை ரத்து செய்து, இங்குள்ள கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றார்.கிராமவாசி இளஞ்செழியன் கூறியதாவது: இந்தக்குவாரிகள் தொடர்ந்து, இயங்கினால் இப்பகுதி முழுவதும் நீர்வளமின்றி, விவசாயம் மற்றும் இயற்கை வளங்கள் அழிந்து பாலைவனமாகும் சூழ் நிலை ஏற்படும். ஆகையால் , மாவட்ட நிர்வாகம் முறையாக ஆய்வு மேற்கொண்டு கனிமவள கொள்ளையை தடுத்து, குவாரிகளை உடனே மூட வேண்டும். தொடர்ந்து, குவாரிகள் செயல்பட்டால் பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu