சோழவந்தான் அருகே ஆக்கிரமிப்பை அகற்றுவதில் பாரபட்சம்: பொது மக்கள் புகார்
மதுரை அருகே காடுபட்டி ஊராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்டுவதாக பொதுமக்கள் புகார்
40 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருக்கும் எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும், அல்லது மாற்று இடம் வழங்க வேண்டும் எனமாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், காடுபட்டி ஊராட்சியில் உள்ள 6.வது வார்டு பகுதியில், ஊராட்சி சார்பில் 40 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி வளாகம் உள்ளிட்ட கட்டடங்கள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு அதற்காக அந்தப் பகுதியில் குடியிருப்பவர்களிடம் காலி செய்யும்படி வருவாய்த்துறையினர் நோட்டீஸ் கொடுத்திருந்தனர். இதன்படி, ஜேசிபி இயந்திரத்துடன் வீடுகளை இடிக்க வந்த வருவாய் துறை மற்றும் காவல்துறையினருடன் இந்தப் பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறு ம்போது:நாங்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருவதால், எங்களுக்கு மாற்று இடம் தர வேண்டும் அல்லது எங்களது இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றுவது என்ற போர்வையில் நாங்கள் குடியிருக்கும் பகுதியை ஊராட்சி நிர்வாகம் இடிக்க முற்படுகிறது. ஊராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கட்டிடங்கள் கட்டுவதற்கு வேறு இடங்கள் இருந்தும், திட்டமிட்டு, ஊராட்சி மன்ற நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட பத்து குடும்பங்களை மட்டும் பழி வாங்குவதற்காகவே, ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற போர்வையில் அடிக்கடி வந்து தொந்தரவு செய்கின்றனர். இதனால், வேலைக்கு செல்ல முடியாமல் குழந்தைகளை வைத்துக் கொண்டு இரவு நேரங்களில் தூங்க முடியாமல் பயத்தில் இருக்கிறோம்.
ஆகையால் , மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு, ஒரு தலைப்பட்சமாக செயல்படும் ஊராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளின் செயல்களை தடுத்து எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.மேலும், ஒரு வாரத்திற்குள் காலி செய்ய சொல்லி வருவாய் துறையினர் வற்புறுத்தி வருவதால்,இது குறித்து, மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu