சோழவந்தானில், இடிந்து விழும் நிலையில் ஊராட்சி ஒன்றிய பள்ளி
பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
மதுரை மாவட்டம் சோழவந்தான் சத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி போதிய பராமரிப்பின்றி இடிந்து விழும் நிலையில், கட்டிடங்கள் இருப்பதாகவும் சுற்றுச்சுவர் இல்லாததால் சுகாதாரக் கேடும் மாலை மற்றும் இரவு நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர் .
மேலும், இந்த வளாகத்தில் அங்கன்வாடி மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்க ஆயத்த பயிற்சி மையமும் செயல்பட்டு வருகிறது.
இந்த வளாகத்தில் உள்ள கட்டிடங்கள் பாதிக்குமேல் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. சுற்றுச்சுவர் இல்லாததால், மாலை மற்றும் இரவு நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் சமூகவிரோதிகள் முகாமாக அமைந்து கஞ்சா மற்றும் மது அருந்துவதாகவும், மது குடித்து விட்டு பாட்டிலை உடைத்து விட்டு செல்கின்றனர். இதனால், பள்ளி வேலை நாட்களில் பள்ளிக்கு வரக்கூடிய பள்ளி குழந்தைகள் காலில் காயம் ஏற்படுகிறது.
அதோடு மட்டுமில்லாமல், வகுப்பறை மாடிகளில் ஏறி சீட்டு விளையாடுகிறார்களாம். பள்ளியில் தொடர்ந்து திருட்டுச் சம்பவம் நடந்து வருகிறது. இங்கு உள்ளவர்கள் புகார் கொடுக்கத் தயங்குகின்றனர் . இதுபோக, பன்றி ஆடு, மாடு உள்ளிட்டவை பள்ளி வளாகத்திற்குள் புகுந்து மாட்டுக் கொட்டகை போல் காட்சி அளிக்கிறது. இதனால், சுகாதாரக் கேடும் ஏற்பட்டு வருகிறது. சிதிலமடைந்த சமையலறை சுகாதார கேட்டின் சிகரமாக உள்ளது.
இது சம்பந்தமாக யூனியன் அலுவலக நிர்வாகிகளிடம் கல்வித்துறை நிர்வாகிகளிடமும் பலமுறை இங்குள்ள பெற்றோர் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் இல்லை.
ஆகையால், மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு மிகவும் பழமை வாய்ந்த பாதுகாப்பில்லாத கட்டிடங்களை அகற்றி புதிய வகுப்பறை கட்டிடம் மற்றும் அங்கன்வாடி மையம் கட்டி கொடுப்பதற்கு ஆவண செய்ய வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu