பத்திரிகையாளர் வீட்டு மனைப்பட்டா ரத்து: எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்
மதுரையில் அரசு ஒதுக்கீட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவை ரத்து செய்த நடவடிக்கை ஏற்புடையதல்ல என்று எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது; பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் பணிபுரியும் பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்யும் திட்டமானது முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் ஆட்சியின் போது கொண்டுவரப்பட்டது. அதன் அடிப்படையில், பல மாவட்டங் களில் உள்ள பத்திரிக்கையாளர்களுக்கு தலா 3 சென்ட் வீதம் வீட்டுமனை வழங்கப்பட்டது. இந்த மனைகளை இலவசமாக அல்லாது அரசால் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பை செலுத்தியே வீட்டுமனை ஒதுக்கீட்டை பத்திரிக்கையாளர்கள் பெற்றனர்.
இந்நிலையில், இந்த திட்டத்தின் அடிப்படையில் மதுரை சூர்யா நகரில் 38 பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவை மதுரை ஆட்சியராக இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட அனீஷ் சேகர் தனது கடைசி பணி நாளில், ரத்து செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வீட்டுமனை ஒதுக்கீடு பெற்ற பத்திரிகையாளர்களுக்கோ அவரது குடும்பத்தினருக்கோ அங்கிருந்து 50 கிமீ தொலைவில் வேறு எந்த சொத்துக்களும் இருக்கக்கூடாது என்ற விதியை காரணமாகக் காட்டி இந்த நடவடிக்கையை ஆட்சியர் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த காரணம் இலவச வீட்டுமனை திட்டத்தில் பெற்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், அரசால் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பை செலுத்தி வீட்டுமனை பெற்றவர்களுக்கு பொருந்தாது என கூறப்படுகிறது.
ஆகவே, அரசால் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பை செலுத்தி வீட்டு மனை ஒதுக்கீடு பெற்ற பத்திரிக்கையாளர் களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவை ரத்து செய்தது ஏற்புடையதல்ல.இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தின் பிற பகுதிகளில் பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனை ஒதுக்குவதில் இந்த விதி பின்பற்றப்படாத நிலையில், மதுரையில் மட்டும் பொருந்தாத விதியை காரணமாகக் காட்டி, அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக வீட்டு மனை ஒதுக்கீட்டை ரத்து செய்தது அநீதியான நடவடிக்கை ஆகும்.
ஆகவே, தமிழக முதல்வர் அவர்கள் இந்த விசயத்தில் தலையிட்டு, ரத்து செய்யப்பட்ட வீட்டுமனை பட்டாவை மீண்டும் பத்திரிகையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu