பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு, வெல்லம் வழங்க வேண்டும்.. மதுரையில் பாஜக ஆர்ப்பாட்டம்…
மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு தமிழ்நாடு அரசின் சார்பாக வழங்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு சுமார் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்த இந்த திட்டத்தை அனைத்து நியாயவிலைக் கடைகளின் வாயிலாக, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயல்படுத்தியது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு பொருட்களோடு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதனையடுத்து, ஆட்சி மாற்றம் நிகழ்ந்த நிலையில், ரொக்கப் பணத்திற்கு பதிலாக அரிசி, நெய், ஏலக்காய் உள்ளிட்ட பொங்கல் பொருட்களோடு மிளகாய் பொடி, கடுகு உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் மளிகைப் பொருட்களும் வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்தநிலையில், இந்த வருடம் பல்வேறு விமர்சனங்களின் எதிரொலியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என்றும் கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை எதிர்த்து, பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மாவட்ட விவசாய அணி மாவட்டத் தலைவர் துரை பாஸ்கர் முன்னிலையில் மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரும்பு மற்றும் வெல்லம் வழங்க வேண்டும், மேலும், 2000 ரூபாய் ரொக்கமாக வழங்க வேண்டும், குறிப்பாக கரும்பு மற்றும் வெல்லத்தை தமிழக விவசாயிகளிம் இமிருந்து கொள்முதல் செய்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பாஜக விவசாய அணியினர் கையில் கரும்புகளை வைத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை பாஜக மாவட்ட தலைவர் சுசீந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu