அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: அமைச்சரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: அமைச்சரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்
X

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசலை பார்வையிட வந்த அமைச்சர் மூர்த்தியை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை பார்வையிட வந்த அமைச்சரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.

உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசல் உள்பகுதியில் சுவர் எழுப்பியதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் முன்னிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பொங்கல் விழாவையொட்டி பல இடங்களிலும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் உலகப் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகின்ற 17ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டை மடைமாற்றும் முயற்சியாக அருகில் உள்ள கீழக்கரை பகுதியில் புதிய ஜல்லிக்கட்டு மைதானம் ஏற்படுத்தப்பட்டு, ஜல்லிக்கட்டு அங்கு நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக அடுத்த ஆண்டு கீழக்கரையில் நடைபெறும் என்று அரசு பின் வாங்கியது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை சீர்குலைக்கும் முயற்சியாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசலின் உள்பகுதியில் இரு பக்கமும் சுவர் எழுப்பி அகலமான ஜல்லிக்கட்டு மாடுகள் வருவதற்கு வழியில்லாமல் செய்யும் முயற்சியாகவும் ஜல்லிக்கட்டின் விறுவிறுப்பை குறைக்கும் முயற்சியாகவும் அமைச்சர் உத்தரவின் பேரில் சுவர் எழுப்பியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளை பார்வையிட இன்று தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி வருகை தந்தாரட். அப்போது அலங்காநல்லூரை சேர்ந்த பொதுமக்கள் வாடிவாசல் முன்பு குவிந்தனர்.

அமைச்சர் முன்னிலையில் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காலங்காலமாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியின் விறுவிறுப்பை குறைக்கும் முயற்சியாக வாடிவாசல் உள்பகுதியில் சுவர் எழுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சுவரை உடனே அகற்றாவிட்டால் பொதுமக்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அமைச்சர் மூர்த்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .

கடந்த சில ஆண்டுகளாக அமைதியான முறையில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு விழாவானது தற்போது ,பெரிய விவாதப் பொருளாக மாறி உள்ளது பொதுமக்களிடையே மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் இதுகுறித்து, முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப் போவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அதன் பழமை மற்றும் பாரம்பரியம் மாறாமல் நடத்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு