சோழவந்தான் அருகே அதிகாரிகள் செய்த தவறுக்கு பலிகடாவான தற்காலிக ஊழியர்
மனைவி, குழந்தைகள் மற்றும் தாயாருடன் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஊராட்சிக்கு உட்பட்ட மேலக்கால் வைகை புது பாலம் அருகே வைகை ஆற்றில் இருந்து விளாங்குடிக்கு குடிநீர் கொண்டு செல்லும் குடிநீர் நீரேற்று நிலையம் உள்ளது. இங்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சமயநல்லூர் அருகே மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரியும் குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் அதிகாரியம் சேர்ந்து பகல் நேரத்தில் அலுவலகத்தில் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
இதனை தொடர்ந்து சில தனியார் தொலைக்காட்சிகளிலும் மின்வாரிய அதிகாரி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஆகியோர் மது அருந்தும் காட்சிகள் செய்தியாக வந்த நிலையில் மதுரை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் இது குறித்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் மேலக்கால் குடிநீர் வடிகால் வாரியத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிக ஊழியராக பணிபுரியும் திருவேடகத்தைச் சேர்ந்த அழகு முத்துக்குமார் என்பவரை பணிநீக்கம் செய்து வாய்மொழியாக உத்தரவிட்டது தெரிய வந்ததுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட அழகு முத்துக்குமார் கூறுகையில் சம்பவம் நடந்த அன்று நான் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் இல்லை என்னுடன் பணிபுரியும் திருவேடகம் கிராமத்தைச் சேர்ந்த ரவி மற்றும் பணியாளர் ராஜா ஆகியோர் சேர்ந்து என்னை பலிகடாவாக்கி விட்டனர் என்றும் கூறினார் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் வடிகால் வாரியத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகிறேன் எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
மனைவி மற்றும் குழந்தைகள் மற்றும் எனது தாயாருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வரும் நிலையில் அதிகாரிகள் செய்த தவறுக்காக வேலை இழந்து தற்போது மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கிறேன். இது குறித்து அதிகாரிகளிடம் நேரில் விளக்கம் அளித்தும் மீண்டும் என்னை பணியில் சேர்க்க மறுக்கிறார்கள். ஆகையால் இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து மனு அளிக்க இருக்கிறேன் எனது குடும்ப சூழ்நிலையை கருதி எனது தற்காலிக பணியினை மீண்டும் எனக்கு வழங்க வேண்டும் என கண்ணீருடன் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu