மதுரை அருகே மேலூரில் ரேசன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம்:மக்கள் சாலை மறியல்

மதுரை அருகே மேலூரில் ரேசன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம்:மக்கள் சாலை மறியல்
X

மதுரை மாவட்டம், மேலூர் அருகே  தரமற்ற ரேஷன் அரிசி வழங்கியதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் தரமற்ற அரிசி வழங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு, அரிசியை சாலையில் கொட்டி பொதுமக்கள் போராட்டம்

மதுரை மாவட்டம் ,மேலூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் தற்போது அரசின் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. மேலூர் அருகே உள்ள கிடாரிப்பட்டி, செட்டியார்பட்டி, பெரிய கற்பூரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில், பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி, சமைத்து உண்பதற்கு ஏற்றவாறு இல்லாமல், மிகவும் தரமற்ற முறையில் இருந்ததால், பொதுமக்கள் நியாயவிலைக் கடை ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள் சரியாக பதில் தெரிவிக்கவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், கிடாரிப்பட்டியில் நியாயவிலைக்கடையில் வழங்கப்பட்ட அரிசியை சாலையில் கொட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், மேலூர் - அழகர்கோவில் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த அங்கு வந்த மேலவளவு காவல்துறையினர் மற்றும் குடிமைப்பொருள் அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறும்போது., மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள நியாய விலை கடைகளில் தற்போது வழங்கப்படும் அரிசி, பழுப்பு நிறத்தில், தரமற்ற முறையில் இருப்பதாகவும், இதுகுறித்து நியாயவிலை கடை ஊழியர்களிடம் கேட்டாலும் பொறுப்பற்ற முறையில் பதில் தெரிவிப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!