மதுரை மாநகராட்சி பகுதி சபை கூட்டங்களில் அடிப்படை தேவைகள் குறித்து விவாதம்…
மதுரையில் நடைபெற்ற பகுதி சபை கூட்டத்தில் பங்கேற்று பேசிய மேயர் இந்திராணி பொன்வசந்த்.
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. இதேபோல, முதல் முறையாக பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் கிராம சபை கூட்டங்களை போன்று நகர பகுதி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன.
வார்டு வாரியாக நடைபெற்ற இந்தக் கூட்டங்களின்போது அந்தந்த பகுதிகளில் உள்ள அடிப்படை தேவைகள் குறித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கருத்துகளை தெரிவித்தனர். அதன்படி, மதுரை மாநகாரட்சிக்குள்பட்ட அனைத்து வார்டுகளிலும் இன்று பகுதி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்தக் கூட்டங்களில் மாமன்ற உறுப்பினர் பகுதி சபா தலைவாரகவும், மாநகராட்சி அலுவலர்களில் ஒருவர் செயலாளராகவும், சம்பந்தப்பட்ட வார்டுக்குள்பட்ட பகுதியைச் சேர்ந்த 5 பேர் பகுதி சபை உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டு பங்கேற்றனர்.
மதுரை மாநகராட்சிக்குள்பட்ட 57 ஆவது வார்டு ஆரப்பாளையம் மந்தை, 75 ஆவது வார்டு சுந்தரராஜபுரம், திடீர் நகர் சமுதாயக்கூடம் ஆகிய பகுதிகளில் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் பகுதி சபை கூட்டங்கள் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்த மேயர் இந்திராணி பொன்வசந்த் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நவம்பர் 1 ஆம் தேதி உள்ளாட்சி தினமாக கொண்டாடுவதற்கு அறிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது கிராமசபைக் கூட்டம் நடைபெறுவது போன்று முதல் முறையாக பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் பகுதி சபை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் வார்டு கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 10 லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை உள்ள வார்டுகளில் 10 பகுதி சபைகள் உருவாக்கப்பட்டு ஆண்டுக்கு 6 முறை நகர பகுதி சபை கூட்டம் அந்தந்த வார்டு மாமன்ற உறுப்பினர்கள் தலைமையில் நடைபெறும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் ஒவ்வொரு வார்டுகளுக்கும் 10 வார்டு கமிட்டி உறுப்பினர்கள் பகுதி சபா செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மேயர் இந்திராணி பொன் வசந்த் தெரிவித்தார்.
மேலும், பகுதி சபை கூட்டத்தின்போது அந்தப் பகுதி வார்டு மக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி கோரிக்கை அளித்தனர். பொதுமக்கள் தெரிவித்த கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் இந்திராணி பொன்வசந்த் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, துணை ஆணையாளர் முஜிபூர்ரகுமான், உதவி ஆணையாளர்கள் மனோகரன் மற்றும் செயற்பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பகுதி சபா செயலாளர்கள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu