மதுரை மாநகராட்சி மண்டலங்களில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்: ஆணையாளர்
கோப்பு படம்
மதுரை மாநகராட்சி பகுதிகளில், பொதுமக்கள் குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, புதிய வரிவிதிப்பு, பெயர் மாற்றம், காலிமனை வரி விதிப்பு, தொழில் உரிமம் வழங்குதல், புதுப்பித்தல், தொழில் வரி விதித்தல் ஆகியவற்றை, பொது மக்களுக்கு உடனுக்குடன் வழங்கும் வகையில், ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை, அந்தந்த மண்டல அலுவலங்களில் ஏற்கெனவே, பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வந்தது.
கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் தற்காலிகமாக தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், மண்டல அலுவலங்களில் பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு மீண்டும் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமினை, தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, ஒவ்வொரு மாதத்தின் முதல் செவ்வாய்கிழமை 1-வது மண்டலமும், 2-வது செவ்வாய்க்கிழமை இரண்டாவது மண்டலமும், 3-வது செவ்வாய்க்கிழமை மூன்றாவது மண்டலமும், 4-வது செவ்வாய்க்கிழமை நான்காவது மண்டலத்திலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 05.10.2021 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை மண்டலம் எண்.1 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆணையாளர் தலைமையில் நடைபெற உள்ளது.
எனவே, அரசின் வழிகாட்டுதலின்படி, முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியினை பின்பற்றியும் அந்தந்த மண்டலங்களில் நடைபெறும் குறைதீர்க்கும் முகாமில், அந்தந்த மண்டலத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் மட்டும் கோரிக்கை மனுக்களை குறைதீர்க்கும் முகாமில் கொடுத்து பயன்பெறுமாறு, ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu