மதுரை மாநகராட்சியில் நமக்கு நாமே திட்டம்: மக்கள் கருத்து கேட்புக் கூட்டம்

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மக்கள் நலப்பணிகளை மேற்கொள்ளவது தொடர்பான கருத்து கேட்புக் கூட்டம மதுரை மாநகராட்சி சார்பில் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி நமக்கு நாமே திட்டம் செயல் படுத்துவது தொடர்பாக குடியிருப்போர் நலச்சங்கங்கள், தனியார் வங்கிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சமூக நல அமைப்புகள், பொதுமக்கள் ஆகியோர்களுடன் கருத்து கேட்பு கூட்டம், ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் தலைமையில் மடீட்சியா அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஆணையாளர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர், மக்கள் நலனுக்காக பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக, வெற்றிகரமான திட்டமான நமக்கு நாமே திட்டத்தினை மீண்டும் செயல்படுத்த உத்தரவிட்டு இத்திட்டத்திற்காக தமிழ்நாடு முழுமைக்கும் ரூ.300 கோடி நிதி ஒதுக்கி உள்ளார்கள்.
. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் புனரமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு வசதிகள் ஏற்படுத்துதல், மரக்கன்றுகள் நடுதல், பள்ளிக்கூடங்கள் மேம்படுத்துதல், பொது சுகாதார மையம் அமைத்தல், கற்றல் மையங்கள் உருவாக்குதல், சாலைகள் மற்றும் தெருவிளக்குள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளலாம்.
மேற்கண்ட பணிகளுக்கு பொதுமக்கள் பங்களிப்பாக ஒரு பங்கு நிதி அளித்தால், அரசின் சார்பில் கூடுதலாக இரு பங்கு நிதி வழங்கப்பட்டு இத்திட்டத்தினை முழுமையாக நிறைவேற்ற முடியும். குறிப்பாக, நீர்நிலைகள் தொடர்பான தூர்வாருதல், கால்வாய்கள் சுத்தம் செய்தல் போன்ற பணிகளுக்கு 50 சதவீதம் பொதுமக்களின் பங்களிப்பு அவசியம் இருத்தல் வேண்டும். இத்திட்டத்திற்கு, பொதுமக்களின் நிதி பங்களிப்பிற்கு மேல்வரம்பு எதுவும் இல்லை.
மேற்கண்ட பணிகள் முழுமையாக முடிவடைந்த பின்பு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப் படுவதுடன், மாநகராட்சியின் மூலம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
இத்திட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், சமூக நல அமைப்புகள், தனியார் வங்கிகள், சி.எஸ்.ஆர்.நிதி வழங்கும் நிறுவனங்கள், உள்ளிட்டோர் மதுரை மாநகரை வளர்ச்சியின் பாதைக்கு கொண்டு செல்வதற்கு தங்களது மேலான ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பை மதுரை மாநகராட்சிக்கு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் நகரப்பொறியாளர் (பொ) சுகந்தி, செயற்பொறியாளர்கள் அரசு, கருப்பாத்தாள், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள், தனியார் வங்கிகள், தன்னனார்வ தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் உட்பட பொதுமக்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu