காலை உணவு திட்டம்: மாநகராட்சி பள்ளிகளில் மேயர், ஆணையாளர் ஆய்வு

காலை உணவு திட்டம்: மாநகராட்சி பள்ளிகளில் மேயர், ஆணையாளர் ஆய்வு
X
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ மாணவிகளுக்கு உணவுகள் வழங்கப்படுவதை மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆய்வு செய்தார்

மதுரை மாநகராட்சி மண்டலம் 2 சாத்தமங்கலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணவுகள் வழங்கப்படுவதை, மேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார், ஆகியோர் இன்று (20.06.2023) ஆய்வு மேற்கொண்டனர்.

நாட்டிலேயே முன்னோடி திட்டமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ,மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவினை , தமிழ்நாடு முதலமைச்சர் 15.09.2022 அன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில், ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

417 மாநகராட்சி பள்ளிகளில் 43,681 மாணவர்கள், 163 நகராட்சி பள்ளிகளில் 17,427 மாணவர்கள், 728 வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகளில் 42,826 மாணவர்கள், 237 தொலைதூர, மலைபிரதேச பள்ளிகளில் 10,161 மாணவர்கள், என, மொத்தம் 1,545 பள்ளிகளில் தொடங்கப்பட்டு, 1,14,095 மாணவர்கள் இத்திட்டத்தின் மூலமாக பயன்பெறுவார்கள்.

மாணவ, மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகர்ப்புற நிர்வாகம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், பள்ளிக்கல்வித் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை ஆகிய துறைகளின் அலுவலர்களை கொண்ட மாநில, மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, இத்திட்டம் கண்காணிக்கப் பட்டு வருகிறது.

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் 1ஆம் வகுப்பு 5ஆம் வகுப்பு பயிலும் 26 தொடக்கப்பள்ளிகள், 14 நடுநிலைப் பள்ளிகள், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 20 ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிகள், 13 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம் 73 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வரை பயிலும் சுமார் 6511 மாணவ, மாணவிகள் தினந்தோறும் பயன்பெற்று வருகிறார்கள்.

மதுரை மாநகராட்சி மண்டலம் 2 சாத்தமங்கலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் அந்த உணவுத் திட்டத்தின் கீழ் உணவுகள் வழங்கப்பட்டு வருவதை மேயர், ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவுகள், தினசரி உணவுகளின் பட்டியல் உள்ளிட்டவற்றை குறித்தும், மாணவ, மாணவிகளிடம் வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்தார்கள். மேயர், ஆணையாளர் ஆகியோர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணவுகளை பரிமாறி அவர்களுடன் சேர்ந்து உணவருந்தினார்கள்.

தொடர்ந்து, எஸ்.எம்.பி.காலனி பகுதியில் தேவையற்ற பொருட்களை உடனடியாக அகற்றி சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ளுமாறும், காலியிடங்களில் குப்பைகள் கொட்டுவதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி, துணை ஆணையாளர் முஜிபுர் ரகுமான், தலைமைப் பொறியாளர் ரூபன் சுரேஷ், நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், கல்வி அலுவலர் நாகேந்திரன், உதவி செயற்பொறியாளர் காமராஜ், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் நல்லுச்சாமி, தலைமை ஆசிரியர்கள், மாநகராட்சி அலுவலர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
சீம்பால்..இத மட்டும் சாப்டாம இருக்காதீங்க!.. இதுல எவ்ளோ பெனிஃபிட்ஸ் இருக்கு தெரியுமா?