துவரை சாகுபடி விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

துவரை சாகுபடி விவசாயிகளுக்கு   இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
X

மத்தூர் வட்டாரத்தில் துவரை சாகுபடி விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் வட்டாரத்தில் துவரை சாகுபடி விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கிருஷ்ணகிரி அடுத்த எலுமிச்சங்கிரியில் உள்ள ஐ.சி.ஏ.ஆர். வேளாண்மை அறிவியல் மையம், புதிய வேளாண்மை தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு செல்லும் வகையில், முதன்மை செயல் விளக்கத் திடல்களை செயல்படுத்தி வருகிறது. பயறு வகைப் பயிர்களுக்கான தேசிய உணவு பயிர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் துவரை சாகுபடியில் தொகுப்பு செயல் விளக்கத் திடலினை 50 விவசாயிகளின் நிலங்களில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

அதன்படி, மத்தூர் வட்டாரத்தில் பசந்தி, மேட்டுக்கொட்டாய், கைலாசபள்ளம் மற்றும் சுந்தரவட்டம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த துவரை சாகுபடி செய்யும் 50 விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பசந்தி மற்றும் சானிப்பட்டி கிராமங்களில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு, மத்தூர் வட்டார வேளாண்மைத் துறை உதவி இயக்குனர் சிவநதி தலைமை தாங்கி, வேளாண்மைத் துறையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத் திட்டங்களை எடுத்து கூறினார்; தொகுப்பு செயல்விளக்கத்தில் பங்கேற்றுள்ள விவசாயிகளுக்கு துவரை ரகம் கோ 8 விதை மற்றும் உயிர் உரங்களை வழங்கினார்.

வேளாண்மை ஆறிவியல் மையத்தின் மண்ணியல் தொழில்நுட்ப வல்லுநர் குணசேகர், தொகுப்பு செயல்விளக்கத் திடலின் முக்கியத்துவம், மண் பரிசோதனை செய்வதின் அவசியத்தை எடுத்து கூறி உயிர் உரங்களைக் கொண்டு விதை நேர்த்தி செய்யும் செயல் விளக்கத்தையும் செய்து காண்பித்தார்.

வேளாண்மை அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுனர் செந்தில்குமார் (வேளாண் விரிவாக்கம்), துவரை சாகுபடியில் நுனி கிள்ளுதல் மற்றும் பயறு ஓன்டர் தெளித்தலின் முக்கியத்துவத்தினை விளக்கிக் கூறினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!