பொதுமக்களிடம் போலீசார் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் மாவட்ட எஸ்பி அறிவுரை
கிருஷ்ணகிரியில் நடந்த போலீசாருக்கான ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி அறிவுரை வழங்கினார்
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், கிருஷ்ணகிரி காவல் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட போலீசாருக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி தலைமை வகித்தார். ஏடிஎஸ்பி ராஜீ, டிஎஸ்பி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் எஸ்பி பேசியதாவது: போலீசார் பொதுமக்களிடம் கனிவாகவும், மரியாதையுடனும் நடந்து கொள்ள வேண்டும். அதே சமயம் சட்டப்படி அனைத்து நடவடிக்கையும் தயங்காமல் எடுக்க வேண்டும். போலீசார், தேவையின்றி பொதுமக்களிடம் வாக்குவாதம் செய்யக்கூடாது. பொதுமக்களிடம் நல்லுறவை வளர்க்க வேண்டும்.
மாவட்டத்தில் எங்கெல்லாம் கஞ்சா, குட்கா, லாட்டரி, விபச்சாரம், சூதாட்டம் போன்ற சட்டத்திற்கு எதிராக எது நடந்தாலும் அவற்றை போலீசார் தடுக்க வேண்டும். இது குறித்து எந்த சந்தேகம் இருந்தாலும், எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம். போலீசார் இரவில் ரோந்து செல்ல வேண்டும். எங்கெல்லாம் வெளிச்சம் குறைவாக உள்ளதோ, எங்கெல்லாம் தேவையின்றி பொதுமக்கள் கூடுகின்றார்களோ, விளையாட்டு மைதானம், கோவில்கள் போன்ற இடங்களில் மது குடிப்பவர்கள் என இது போன்ற செயல்களுக்கு போலீசார் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குற்றங்கள் நடந்து முடிந்த பின்னர் கண்டுபிடிப்பதைவிட, குற்றங்கள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவை நமக்கு வரும் புகார்களை வைத்தே நாம் கண்டுபிடிக்கலாம். ஸ்டேசனில் புகார் அளிப்பவர்களுக்கு எந்த நேரமாக இருந்தாலும் சிஎஸ்ஆர் அல்லது எப்ஐஆர் வழங்க வேண்டும். வழக்கு பதிவு செய்வதில் எந்த தாமதமும் கூடாது. தாமதமாகும் போது பிரச்னைகளும் பெரிதாக மாறும். உடனே வழக்குப்பதிவு செய்து ரசீது வழங்க வேண்டும்.
இதில் மாநில அளவிலான பிரச்னைக்கு என்னை தொடர்பு கொண்டபின் வழக்கு பதிவு செய்ய வேண்டும். நிலம் தொடர்பான புகார்களை நேரில் சென்று விசாரிக்க வேண்டும். போலீசாருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும். புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று எனக்கு புகார்கள் வரக்கூடாது. போலீசார் நேர்மையாகவும், கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu