கிருஷ்ணகிரியில் மு.க.ஸ்டாலின் பிரசாரம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் கிருஷ்ணகிரி செங்குட்டுவன், ஓசூர் பிரகாஷ், வேப்பனஹள்ளி முருகன், பர்கூர் மதியழகன் மற்றும் கூட்டணி கட்சியான ஊத்தங்கரை காங்கிரஸ் வேட்பாளர் ஆறுமுகம், தளி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராமச்சந்திரன் ஆகியோரை ஆதரித்து, சூளகிரி பழைய பஸ் நிறுத்தம் அருகில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
உங்களையெல்லாம் தேடி, நாடி நான் வந்துள்ளேன். உரிமையுடன் ஓட்டு கேட்டு வந்துள்ளேன். உணர்வுடன் உங்களில் ஒருவனாக வந்துள்ளேன். தேர்தலுக்கு மட்டும் இந்த ஸ்டாலின் வந்து போவதில்லை. எந்த நேரத்திலும், எந்த சூழலிலும் எப்படிப்பட்ட நேரத்திலும் உங்களின் வாழ்வில் உள்ள சுக, துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க கூடியவன், இந்த ஸ்டாலின்.
ஏழை, எளிய மக்களுக்காக திருமண நிதியுதவி திட்டம், மகளிர் சுய உதவிக்குழு இவற்றை கொண்டு வந்தவர் கலைஞர். தற்போது நமது தேர்தல் அறிக்கையில் மாதம் ரூ.1000 உதவித்தொகை மகளிருக்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளோம். கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன் தள்ளுபடி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசலுக்கு லிட்டருக்கு ரூ.4 குறைக்கப்படும். சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும். பாலுக்கு லிட்டருக்குரூ.3 குறைக்கப்படும். இதைத் தவிர இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப்படும். கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டையில் குளிர்பதன கிடங்கு, ஓசூர் இ.எஸ்.ஐ.மருத்துவமனை தரம் உயர்வு, ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் அனைத்து கிராமங்களுக்கும் வழங்கப்படும். ஓசூரில் தகவல் தொழில் பூங்கா இயங்க நடவடிக்கை. ஓசூரில் ஆண், பெண் தொழிலாளர்களுக்கு விடுதி வசதி, பர்கூரில் கலை கல்லூரி, ஏரிகளுக்கு நீர் நிரப்ப நடவடிக்கை. இப்படி எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி தர உள்ளோம்.
கடந்த 7ம் தேதி திருச்சியில் நடந்த மாநாட்டில் 7 அறிவிப்புகளை வெளியிட்டேன். அது 10 ஆண்டுகளுக்கு தொலை நோக்கு பார்வையுடன் கூடியது. ஏன் என்றால் தற்போது தமிழகம் பின்னோக்கி உள்ளது. மாநிலத்தின் உரிமைகள் காக்கப்பட வேண்டும். எனவே, வருகிற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu