ஒசூரில் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவரின் கண், அறுவைசிகிச்சை மூலம் அகற்றம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த மூக்கண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பசவராஜ். கூலி தொழிலாளியான இவர் கண்பார்வை குறைபாடு காரணமாக ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நாளுக்குநாள் கண்பார்வை குறைந்து வலி அதிகரித்த நிலையில் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவருக்கு கரும்பூஞ்சை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் 4 மணிநேர சிகிச்சைக்கு பின் வலது கண் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து தனியார் மருத்துவமனை தலைமை மருத்துவர் சுந்தரவேல் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில்:
10 இலட்சம் பேரில் ஒருவருக்கு தாக்கக்கூடிய கரும்பூஞ்சை, பசவராஜ் அவர்களுக்கு மூக்கு வழியாக கண் பகுதிக்கு பரவி கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு, பல சிகிச்சைக்கு பிறகு எங்கள் மருத்துவமனைக்கு வந்தார். அவரின் வலதுபுற கண் முழுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதை அறிந்து டாக்டர் நிகில் தலைமையிலான மருத்துவக்குழு 4 மணிநேர சிகிச்சைக்கு பிறகு அவரின் வலது கண்ணை முழுமையாக அகற்றியதுடன் கரும்பூஞ்சையும் அகற்றப்பட்டுள்ளது என்று கூறினார்.
தற்போது அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மற்ற தனியார் மருத்துவமனைகளில் 1.50 லட்சம் ரூபாய் செலவிட வேண்டிய நிலையில் இந்த மருத்துவமனையில் குறைந்த செலவில் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக தெரிவித்தார்.
நோய் எதிர்ப்பு சக்திக்குறைவு, சர்க்கரை நோய் உள்ளிட்டவர்களுக்கு கரும்பூஞ்சை அதிகஅளவில் பாதிப்பு ஏற்படுத்தும் என கூறிய அவர் கண், முகம் வீக்கம், கருப்பு நிறத்தில் சளி வெளியாவது கரும்பூஞ்சை பாதிக்கப்பட்டதற்கான அறிகுறி என தெரிவித்தார்.
இது மாவட்டத்தில் முதல் கரும்பூஞ்சை தொற்று என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu