கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியில் இளங்கலை பிரிவில் மாணவர் சேர்க்கை
பைல் படம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியில் பி.டெக்., இளங்கலை பாடத்திற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வருகிற அக்டோபர் மாதம் 8ம் தேதி கடைசி நாளாகும்.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஓசூரில் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் இளங்கலை பட்டமான பி.டெக்., (கோழியின தொழில்நுட்பம்) வழங்கி வருகிறது. இதில் ஒற்றை சாளர முறையில் சேர்க்கை நடைபெறும். 4 ஆண்டுகள் படிப்பான இதில் வருடாந்திர மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 40 மட்டுமே ஆகும். இதில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்கள் பிளஸ் 2 பாடத்திட்டத்தில் கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் படித்திருக்க வேண்டும். இப்படிப்பிற்கான தனி நுழைவுத் தேர்வு எதுவும் இல்லை. தமிழ்நாடு அரசின் விதிமுறைகளின்படி, குறைந்தபட்ச மதிப்பெண் தேவை மற்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். கல்வி கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்கிறது.
இதில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு கோழியின தொழில்துறையில், தாயக்கோழிப் பண்ணைகள், குஞ்சு பொரிப்பகங்கள், தீவன ஆலை, ஆய்வகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அதன் சார்ந்த துறைகளில் மேலாளர்களாக பணியமர்த்தப்படுகிறார்கள். மேலும், அகில இந்திய மற்றும் மாநில அளவிலான அரசு போட்டித் தேர்வுகளுக்கும் தகுதி பெறுகிறார்கள். மேலும் இந்த கல்லூரியானது, கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மையில் அனைத்து பிரிவுகளிலும் பயிற்சியளிக்க மற்றும் வழிகாட்ட, சிறந்த அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டுள்ளது.
இதில் பொறியியல் வளாகம், தொழில்நுட்ப வளாகம், உலகத்தரம் வாய்ந்த நவீனமயமாக்கப்பட்ட வகுப்பறைகள், சிறந்த ஆய்வகங்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி விடுதி வசதி, அதிநவீன நூலகம் மற்றும் வை-பையுடன் கூடிய இணையதள வசதியும் கொண்டுள்ளது. இதில் சேர வருகிற அக்டோபர் மாதம் 8ம் தேதிக்குள் மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu