கரூரில் தடுப்பூசி மையத்தில் தள்ளு, முள்ளு வாக்கு வாதம், காற்றில் பறந்த சமூக இடைவெளி
கரூர் மாவட்டம் காந்திகிராமம் துணை சுகாதார நிலையத்தில் 300 நபர்கள் இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
கரூரில் தடுப்பூசி மையத்தில் வரிசையில் நிற்க முந்திக் கொண்டு வந்த நபர்களால் பொதுமக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கடும் வெயிலைத் தவிர்க்க மரத்தடியில் கூட்டம் கூட்டமாக கூடிய பொதுமக்களால் சமூக இடைவெளி காற்றில் பறந்தது.
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணியி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் கரூர் பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காந்திகிராமம் துணை ஆரம்ப சுகாதார நிலையம், குளித்தலை உள்ளிட்ட 8 மையங்களில் 2200 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
இந்த நிலையில் காந்திகிராமம் துணை சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடுவதற்காக ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்தனர்.
பொதுமக்களில் சிலர் வரிசையில் முறையாக நிற்காமல் குறுக்கே வந்த காரணத்தால் பொதுமக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அப்போது போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். வரிசையில் நிற்கும் இடத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அவரவர் காலணியைக் கழற்றி வைத்து மரத்தடியில் ஓரமாக ஒதுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக ஒன்று கூடி நிற்பதால் சமூக இடைவெளி காற்றில் பறந்து தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
காந்திகிராமம் துணை சுகாதார நிலையத்தில் 300 நபர்களுக்கு இன்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். முதன் முறையாக இந்த மையத்தில் முகாம் நடைபெறுவதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டு சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu