கொரோனா தடுப்பூசி போடுங்க.....வாஷிங் மெஷின், கிரண்டர், மிக்சி பரிசை அள்ளுங்க

கொரோனா தடுப்பூசி போடுங்க.....வாஷிங் மெஷின், கிரண்டர், மிக்சி பரிசை அள்ளுங்க
X

கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வோருக்கான பரிசு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 

5 ம் கட்ட தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு வாஷிங்மெஷின், மிக்ஸி உள்ளிட்ட பரிசுகள் குலுக்கல் முறையில் வழங்கப்படும்.

கரூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை சிறப்பாக நடத்துவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: வரும் ஞாயிற்றுக்கிழமையன்று 5ஆம் கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் மாவட்டம் முழுவதும் நடத்தப்படவுள்ளது. கரூர் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 6,22,735 நபர்களும், இரண்டாவது தவணை தடுப்பூசியினை 1,68,650 நபர்களும் செலுத்தியுள்ளனர். மீதமுள்ளவர்களுக்கும் இந்த முகாமின்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு 100 சதவீத இலக்கை எய்திடும் வகையில் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும்.

இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய காலம் வந்த பிறகும் செலுத்தாதவர்களின் பெயர், முகவரி, அலைபேசி எண், ஆதார் எண் போன்ற விபரங்களை குறித்து வீடு வீடாக சென்று கணக்கெடுத்து சேகரிக்க வேண்டும். ஒரு நபருக்கு 50 முதல் 60 வீடுகள் இலக்கீடாக வழங்கப்படலாம்.

இந்த கணக்கெடுப்பிற்கென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர், ஊராட்சி செயலர், பணித்தள பொறுப்பாளர், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் வாக்குச்சாவடி அளவில் நியமிக்கப்பட வேண்டும். இந்தக் குழுக்களை ஒருங்கிணைத்து அந்தந்தப் பகுதிகளின் வட்டாட்சியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணக்கெடுப்புப்பணிகளை முடிக்க வேண்டும்.

கணக்கெடுப்பாளர் தடுப்பூசி முகாமிற்கு எத்தனை நபர்களை அழைத்து வருகின்றார்களோ, அதற்கு தகுந்தாற்போல் ஒரு நபரக்கு ரூ.5 வீதம் கணக்கெடுப்பாளருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும், அன்றைய முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நபர்களில் மாவட்ட அளவில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு முதல் பரிசாக துணி துவைக்கும் இயந்திரமும் (வாஷிங் மிஷின்), இரண்டாம் பரிசாக கிரைண்டர், மூன்றாம் பரிசாக மிக்ஸியும், நான்காம் பரிசாக 25 நபர்களுக்கு குக்கர் மற்றும் ஆறுதல் பரிசாக 100 நபர்களுக்கு பாத்திரங்களும் வழங்கப்படவுள்ளது.

25க்கும் மேற்பட்ட நபர்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள முகாமிற்கு அழைத்து வந்தால் அவருடைய பெயரும் குலுக்கலில் சேர்க்கப்படும். தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கணக்கெடுப்பின்போதே பரிசுகள் குறித்த விபரம் அடங்கிய டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும். தடுப்பூசி செலுத்தப்படும் அன்று அந்த டோக்கன்களுடன் வருகை தர அறிவுறுத்த வேண்டும்.

நம்மிடையே, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு ஓய்வூதியம் பெறும் நபர்களின் தகவல்களும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் நபர்களின் தகவல்களும் ஏற்கனவே கணினிமயமாக்கப்பட்டுள்ளது. அவர்களில் யாரெல்லாம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்பது குறித்துமான தகவல்களை சேகரிக்க வேண்டும். 5ஆம் கட்ட முகாமின் மூலம் 100 சதவீத இலக்கை கரூர் மாவட்டம் அடைய வேண்டும் என தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராச்சலம், சிறப்பு வருவாய் அலுவலர்(நிலமெடுப்பு) கவிதா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன், நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஞானக்கண் பிரேம் நிவாஸ், துணை இயக்குநர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்