வடியாத மழைநீர்; தீராத மக்களின் சோகம்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

வடியாத மழைநீர்;  தீராத மக்களின் சோகம்:   கண்டுகொள்ளாத அதிகாரிகள்
X

ஏலாக்கரை பகுதியில், பல மாதங்களாக வீடுகளை சூழ்ந்துள்ள மழை நீர்.

குமரியில், நான்கு மாதங்களாக வடியாத மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்களின் அவதி தொடர்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே ஏழுதேசம் பேரூராட்சிக்கு உட்பட்ட பாலமடம், பள்ளிதோட்டம், ஏலாக்கரை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள், அரசு அனுமதி பெற்று வீடுகள் அமைத்து வரி செலுத்தி வசித்து வருகின்றனர்.

இந்த பகுதிகள் தாழ்வானது என்பதால், மழைக் காலங்களில் தண்ணீர் வழிந்தோடி அந்த பகுதிகளில் தேங்குவது வழக்கம். மழை நீர் தேங்காமல் நேரடியாக ஆற்றில் கலக்கும் வகையில் மழைநீர் வடிகால் ஓடைகள் அமைக்கப்பட்டு இருந்தது, தற்போது ஆக்கிரமிப்புகளால் இந்த ஓடைகள் அனைத்தும் மூடப்பட்டு காணப்படுகிறது.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன், குமரி மாவட்டத்தில் பெய்த கனமழையால், இந்த பகுதி வீடுகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கின இதனால், வீடுகள் மற்றும் உடமைகளை விட்டு, அரசு பேரிடர் மேலாண்மை மீட்பு மையங்களில் தஞ்சம் புகுந்தனர். மாதங்கள் நான்கு கடந்த பின்பும் இதுவரை இந்த மக்களுக்கு, எந்த வித தீர்வும் ஏற்படுத்தி கொடுக்காமல் அரசு துறை அதிகாரிகள் மெத்தனமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.

பொதுமக்கள் புகார்கள் அளிக்கும் போது மட்டும் கண்துடைப்பிற்காக அந்த பகுதிகளுக்கு வந்து ஆய்வு என்ற பெயரில் சுற்றி பார்த்துவிட்டு சென்று வருவதாகவும், அவ்வாறு வரும் அதிகாரிகளிடம் கேள்வி கேட்டால் காவல்நிலையத்தில் பொய் புகார்கள் அளித்து வழக்கு பதிவு செய்து மிரட்டியும் வருவதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, ஆக்ரமிப்புகளை அகற்றி குடியிருப்பு பகுதிகளுக்குள் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றி, மேற்கொண்டு தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!