நான்காவது முறையாக நிரம்பி வழியும் பழையசீவரம் பாலாறு தடுப்பணை..
பழையசீவரம் பகுதியில் அமைந்துள்ள தடுப்பணை மீண்டும் நிரம்பி வழிகிறது.
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் இன்று அதிகாலை மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதனால். தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக அதி தீவிர காற்று மற்றும் கனமழை பெய்தது. காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது .
கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரத்தில் 184 மில்லி மீட்டர், குன்றத்தூரில் 147 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 குளங்களில் 146 குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 84 குளங்கள் 80 சதவீதத்தை தாண்டி உள்ளது.
காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து நீர் செல்கிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் பாலாற்றின் குறுக்கே பழையசீவரம் பகுதியில் ரூ. 42 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணை நான்காவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிரம்பி வழிகிறது.
இதனால், தாம்பரம்-பல்லாவரம் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் பல்வேறு கிராம கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மிகுந்த பயன் பெறும். மேலும், பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். கிணறுகளில் நிலத்தடி நீர் உயர் மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
மாண்டஸ் புயல் கரையை கடந்தாலும் காலை முதலில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. சூறைக்காற்று வீசியதன் காரணமாக சாலையில் உள்ள மரங்கள் முறிவு ஏற்பட்டு அதனை அகற்றும் பணி தற்போது 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன.
மேலும், சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றி பலமுறை சோதனைக்கு பிறகு ஒவ்வொரு பகுதியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள், ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், மாமன்ற உறுப்பினர்கள், பேரிடர் கண்காணிப்பு குழுக்களை சேர்ந்த அலுவலர்கள் என பல்வேறு குழுவினர் தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் முகாமிட்டு தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்துள்ள தண்ணீரை மின்மோட்டார் மற்றும் லாரிகள் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர். மேலும், அந்தப் பகுதிக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கும் வகையில் தற்போது வருவாய்த்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
மழை இன்று இரவு பெய்யாவிட்டால் நாளை மீண்டும் முழு வீச்சில் பணிகள் தொடரும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்புகளுக்கு உடனடியாக பதில் அளிக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. புகார் தெரிவிக்கும் நபர்களுக்கு உடனடியாக பதில்களும் தெரிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu