வெள்ளத்தால் பள்ளி செல்ல முடியாமல் தவித்த மாணவர்கள்.. உதவிக் கரம் நீட்டிய ஊராட்சி மன்றத் தலைவர்..
மாணவர்களுக்காக கிராம ஊராட்சி மன்ற கட்டிடத்தில் நடத்தப்படும் சிறப்பு வகுப்புகள்.
வடகிழக்கு பருவமழை தீவிமடைந்துள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒன்றாம் தேதி முதல் மாவட்டத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. கடந்த 14 தினங்களில் காஞ்சிபுரம் பகுதியில் 304 மில்லி மீட்டரும், ஸ்ரீபெரும்புதூரில் 308 மில்லி மீட்டர், உத்திரமேரூர் 433 மில்லி மீட்டர், வாலாஜாபாத்தில் 204 மில்லி மீட்டர், செம்பரம்பாக்கம் பகுதியில் 380 மில்லி மீட்டரும், குன்றத்தூர் பகுதியில் 380 மில்லி மீட்டர் என மொத்தம் 2112 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த கனமழை காரணமாக மாகரல் - வெங்கச்சேரி இடையே அமைந்துள்ள மேம்பாலம் முற்றிலும் சேதம் அடைந்தது. அதன்பின் அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் அவ்வப்போது கன மழையில் சேதம் அடைந்து வருவது வாடிக்கையாகி வருகிறது.
செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து கடந்த மூன்று நாட்களாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
நெய்யாடுபாக்கம் பகுதியில் அமைந்துள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் இளையனார் வேலூர் , சித்தாப்பூர், வள்ளிமேடு, காவாந்தண்டலம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ-மாணவியர்கள் பள்ளியில் பயின்று வருகின்றனர். செய்யாற்றில் வெள்ளம் ஏற்படும் போதெல்லாம் அந்தப் பகுதி மாணவர்கள் பள்ளி செல்வது தடை ஏற்படும். அப்போது எல்லாம் திருமண மண்டபங்கள், நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வகுப்புகள் நடப்பது வழக்கம்.
அந்தவகையில், தற்போதும் வெள்ளப்பெருக்கு அதிகமாக ஏற்பட்டுள்ளதால், பள்ளி மாணவர்களின் கல்வி நலன் கருதி கிராம ஊராட்சி மன்ற தலைவர் கமலக்கண்ணன் உடனடியாக பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு மாணவ, மாணவிகளுக்கு என தனித்தனியாக வகுப்புகள் எடுக்கும் வகையில் ஊராட்சி மன்ற கட்டிடங்கள் கிராம சேவை மையக் கட்டிடம் என அனைத்தையும் தர தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அந்தக் கட்டிடங்களை ஏற்பாடு செய்து தற்போது இன்று முதல் அங்கு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால் அந்தப் பகுதி பெற்றோர்கள் பள்ளி மாணவர்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதலே இளையனார் வேலூர் - நெய்யாடுபாக்கம் இடையே மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கையை அந்தப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது வரை எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால் பொதுமக்களிடையே வருத்தம் அடையச் செய்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu