விபத்திற்கு அபராதம் வசூலிக்காமல் கல்குவாரி உரிமம் வழங்க வேண்டாம்: பசுமை தீர்ப்பாயம்
புவியியல் மற்றும் சுரங்கத் துறை விதித்துள்ள அரசு விதிகளை மீறி அதிக அளவு ஆழம் எடுத்து கனிமக் கொள்ளையில் ஈடுபட்ட குவாரி நிறுவனங்கள். ( கோப்பு படம்).
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாகரல், வாலாஜாபாத், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் கல்குவாரிகளும் நூற்றுக்கும் மேற்பட்ட எம்சாண்ட் அரவை நிலையங்களும் செயல்பட்டு வருகிறது.
இந்த கல்குவாரிகள் அரவை நிலையங்கள் அரசு விதிமுறைகளையும் மீறி செயல்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் தற்போது வரை உள்ளது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டத்திற்கு உட்பட்ட மதூர் அருகே செயல்பட்டு வந்த கல்குவாரியில் கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ம் தேதி மாலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு கல்குவாரியில் பணிபுரிந்து வந்த வடமாநில தொழிலாளர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஈடுபாடுகளில் சிக்கி சுமார் 40 மணி நேரத்திற்கு பிறகு அவர்கள் உடல்கள் மீட்கப்பட்டு இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது குறித்த செய்திகள் தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்கள் வந்ததை அடுத்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் பல்வேறு இடைக்கால உத்தரவை பிறப்பித்து, இவ்வழக்கை விசாரித்து வந்தது. இந்நிலையில், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா நிபுணர் குழு உறுப்பினர் சத்திய கோபால் ஆகியோர் இதுகுறித்து தீர்ப்பளித்தனர்.
தீர்ப்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் கல்குவாரிகள் எவ்விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளாமல் செயல்பட்டு வந்ததும், குத்தகைக்கு விடப்படாத பகுதிகளில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வந்ததும், அளவுக்கு அதிகமான ஆழம் தோண்டி கனிம வளங்களை கொள்ளையடித்ததும் கண்டறியப்பட்டதாக கூறியது. விபத்தில் இறந்தவருக்கு இழப்பீடு வழங்கப்பட்டதாக எதிர்மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டாலும், சட்டவிரோதமாக அரசு விதிமுறைகளை மீறி கனிமங்களை கொள்ளை அடித்ததற்கு 24 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கத் துறை தெரிவித்துள்ளது.
மேலும் வசூலிக்கப்படும் அபராத தொகை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டும் எனவும், விதிக்கப்பட்ட அபராத தொகையை வசூலிக்காமல் தவறு செய்பவர்களுக்கு உரிமம் வழங்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
விதிகளை மீறி செயல்பட்டு வரும் கல்குவாரிகளுக்கு இந்த தீர்ப்பு எச்சரிக்கையாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu