இளைஞர்கள் வேலை அளிப்பவராக உருவாக வேண்டும்: அமைச்சர் அன்பரசன் அறிவுரை…
இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையை டி.ஆர். பாலு எம்.பி., அமைச்சர் அன்பரசன் ஆகியோர் வழங்கினர்.
தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் தனியார் தொழிற்சாலைகளில் உள்ள பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டு, மாவட்ட அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் தொழிற்சாலை நிறுவனங்கள் சார்பில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் குன்றத்தூர் வட்டம் , படப்பை ஊராட்சியில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது.
தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முகாமில் பணிக்காக தேர்வு செய்யப்பட்ட 100 பேர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி தமிழக சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ,அன்பரசன் பேசியதாவது:
கடந்த திமுக ஆட்சியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15000 ஏக்கர் நிலங்கள் தொழிற்சாலைகளுக்காக ஒதுக்கப்பட்டு கடந்த அதிமுக ஆட்சியில் எந்த ஒரு பெரிய தொழிற்சாலையும் இல்லாத நிலையில், மீண்டும் திமுக ஆட்சியின் போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டது.
இதன் மூலம் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகும் இன்றளவும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இது போன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் எனவும், அதற்காக தொழிற்சாலை பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் தலைமையில் பல கூட்டங்கள் நடைபெற்ற பின் தற்போது இந்த மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் இந்த தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இனிவரும் காலங்களில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை இது போன்ற வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும். உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் வகையில் முகாம் நடைபெறும். வேலைவாய்ப்பு முகாமை பயன்படுத்திக் கொண்டு வருங்காலங்களில் வேலை தேடுவோராக அல்லாமல், மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கக்கூடிய தொழில் முனைவோராக இளைஞர்கள் மாற வேண்டும்.
அதற்கான ஆலோசனைகளை மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட துறைகள் வழங்கி உற்பத்தி முதல் விற்பனை வரை உதவி செய்ய காத்திருக்கின்றனர் என அமைச்சர் அன்பரசன் பேசினார். முகாமில், காஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளை சேர்ந்த 87 மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் தங்கள் தொழிற்சாலை நிறுவனங்கள் சார்பாக கலந்து கொண்டு ஊழியர்களை தேர்வு செய்தனர்.
முகாமில் 2432 பேர் தங்கள் கல்வித் தகுதி மற்றும் விவரங்களுடன் பதிவு செய்து நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர். முதல்கட்டமாக 544 பேருக்கு பல்வேறு கல்வித் தகுதி அடிப்படையில் தொழிற்சாலை நிறுவனங்களுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
நிகழ்ச்சியில், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சரஸ்வதி மனோகரன், துணைத் தலைவர் வந்தே மாதரம், குன்றத்தூர் வட்டாட்சியர் கல்யாண சுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu