அரசுப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இன்றி மாணவர்கள் அவதி
நாவலூர் பகுதியில் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.
காஞ்சிபுரம் மாவட்டம், ஶ்ரீபெரும்புதூர் அடுத்த செரப்பணஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட நாவலூர் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அமைந்துள்ளது. அங்கு வசிக்கும் பொது மக்களின் குழந்தைகளுக்காக அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்தப் பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் நான்கு, ஐந்து, ஆறு வகுப்பு பயிலும் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு போதுமான வகுப்பறைகள் இல்லாததால் அருகிலுள்ள கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் உள்ள அறைகள், வராண்டா உள்ளிட்டவற்றில் இட நெருக்கடியோடு தரையில் அமர்ந்து பல வகுப்பு மாணவர்கள் கடந்த ஓராண்டுகளாக படித்து வருகின்றனர்.
இதனால் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் கற்றல் திறன் குறைந்து வருவதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த இரண்டு வருடங்களாக இந்த பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்தது தொடர்ந்து கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டி தர மாவட்ட நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் மனு கொடுத்துள்ளனர்.
ஆனால் இதனால் வரை கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் வகுப்பறை வசதிகள் இல்லாததால் பெற்றோர்கள் மாணவர்களை இந்த பள்ளியில் சேர்ப்பதற்கு தயக்கம் காட்டுவதாகவும், சிலர் அண்டை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் சேர்த்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே மாணவர்களின் நலன் கருதி கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டி தர வேண்டும் என பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
பல இடங்களில் கட்டிடங்கள் இருந்தாலும் போதிய மாணவர்கள் வருகை இல்லாததால் ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைத்தல் பள்ளிகளை இடமாற்றம் செய்ய அரசு யோசிக்கும் நிலையில் இது போன்று அதிக அளவு மாணவர் சேர்க்கை உள்ள இடங்களில் விரைந்து கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை சட்டமன்ற உறுப்பினர் நிதி அல்லது அருகில் உள்ள தொழிற்சாலைகளின் சி எஸ் ஆர் நிதியிலிருந்து பெற்று உடனடியாக இப்பள்ளி மாணவர்களின் நலன் கருதி கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்று அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu