ஸ்ரீபெரும்புதூரில் கொசு மருந்து அடித்தபோது திடீரென வெடித்த இயந்திரம்.. பேரூராட்சி ஊழியருக்கு தீக்காயம்..

ஸ்ரீபெரும்புதூரில் கொசு மருந்து அடித்தபோது திடீரென வெடித்த இயந்திரம்.. பேரூராட்சி ஊழியருக்கு தீக்காயம்..
X

வெங்கடாசலபதிக்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை ஆறுதல் கூறினார்.

ஸ்ரீபெரும்புதூரில் கொசு மருந்து அடித்தபோது இயந்திரம் திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்ததில் பேரூராட்சி ஊழியருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கட்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி (வயது 24). இவர், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் 2 ஆவது வார்டு செல்ல பெருமான் நகரில் வெங்கடாசலபதி மற்றும் ஊழியர்கள் சிலர் பேட்டரி வாகனத்தில் சென்று கொசு மருந்து தெளிக்கும் இயந்திரத்தின் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டனராம்.

அப்போது, திடீரென எதிர்பாராத விதமாக கொசு மருந்து தெளிக்கும் இயந்திரம் வெடித்து சிதறியது. இதனால் பணியில் ஈடுபட்டிருந்த வெங்கடாசலபதிக்கு முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. மேலும், பேட்டரி வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையெடுத்து அங்கிருந்த பொதுமக்கள் எரிந்து வந்த வாகனத்தின் மீது தண்ணீர், மண் உள்ளிட்டவைகளை வீசி தீயை அணைத்தனர். பின்னர், விபத்தில் படுகாயம் அடைந்த வெங்கடாசலபதியை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வெங்கடாஜலபதி சிகிச்சை பெற்று வருகிறார்.

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நிர்வாகம் கொசு மருந்து தெளிக்கும் இயந்திரங்களை முறையாக பராமரிக்காததால் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நேரிடுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கொசு மருந்து இயந்திரம் கையாளுவதற்கான ஊழியர்களுக்கு முறையான பயிற்சி மற்றும் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களையும் பேரூராட்சி நிர்வாகம் வழங்க வேண்டும் என்பதும் கோரிக்கையாக எழுந்துள்ளது.

மேலும், ஊழியர்களும் இந்தப் பணிகளை மேற்கொள்ளும் போது தகுந்த பாதுகாப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது. இந்த நிலையில், தீக்காயம் அடைந்த ஊழியர் வெங்கடாசலபதியை சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். வெங்கடாசலபதிக்கு தரமான சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களிடம் செவ்லபெருந்தகை எம்எல்ஏ அறிவுறுத்தினார்.

Tags

Next Story
ai healthcare technology