ஸ்ரீபெரும்புதூரில் இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம்.. 2 இளைஞர்கள் கைது...

ஸ்ரீபெரும்புதூரில் இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம்.. 2 இளைஞர்கள் கைது...
X

ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையம் ( கோப்பு படம்)

ஸ்ரீபெரும்புதூரில் இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த வழக்கில் இரண்டு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூர் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கடந்த டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி இரவு 12 மணியளவில் ஸ்ரீபெரும்புதூர் எம்.ஜி.ஆர் நகர் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள் போலீஸார் எனக் கூறி மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர், அந்த இளம் பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், இளம்பெண் பாலியல் வன்புணர்ச்சி வழக்கில் சம்மந்தப்பட்டவர்களை விரைந்து கைது செய்ய காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் தலைமையில் தனிப்படை குழுக்கள் அமைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், தனிப்படை போலீஸார் தேடி வந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சுண்ணாம்புக்குளம் பெருமாள்கோவில்தெருவைச் சேர்ந்த நாகராஜ் (வயது 31), பிரகாஷ் (31) ஆகியோரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள்தான் இளம் பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது என தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, நாகராஜ் மற்றும் பிரகாஷை கைது செய்த போலீஸார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஏற்கெனவே இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. காஞ்சிபுரம் பெரியார்நகரில் பெண் ஒருவரை பாலியல் தொந்தரவு செய்ததாக தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

மேலும், காஞ்சிபுரம் தவிர அரக்கோணம், திருவள்ளுர், செய்யாறு மற்றும் சில இடங்களிலும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும், காவலர்கள் என்று சொல்லி பல பெண்களை விசாரணைக்கு அழைப்பதாக கூறி பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளதும் தெரியவந்தது. மேலும், கைதான இருவரிடம் இருந்தும் அரிவாள், கத்தி வாக்கி டாக்கி, லத்தி, இருசக்கர வாகனங்கள், செல்போன்கள், நம்பர் பிளேட் கட்டர், மிளகாய்பொடி, சாவி, ரிவால்வர் ரவுண்ட்ஸ், ராடு, கையுறை மற்றும் முகமுடி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகள் கைது செய்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!